Connect with us

Cinema History

கடுப்பேற்றிய உலகநாயகன்.. பங்கமாய் கலாய்த்த பாக்யராஜ்.. படப்பிடிப்பில் ஒரு தரமான சம்பவம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக திகழ்ந்தவர் பாக்யராஜ். “சுவரில்லா சித்திரங்கள்”, “ஒரு கை ஓசை”, “அந்த 7 நாட்கள்” என தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார்.

திரைக்கதை வடிவமைப்பில் தனித்துவமாக திகழ்ந்தவர் பாக்யராஜ். இப்போதும் திரைக்கதை வடிவமைப்பு என்றாலே சினிமாத்துறையினருக்கு பாக்யராஜ் தான் ஞாபகம் வருவார். அந்த அளவுக்கு தனது சிறப்பான திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

பாக்யராஜ் தொடக்க காலத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அப்படி அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த திரைப்படங்களில் ஒன்று தான் “16 வயதினேலே”.

இத்திரைப்படம் தமிழின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கமல் ஹாசனின் சப்பாணி கதாப்பாத்திரம், ரஜினிகாந்த்தின் பரட்டை கதாப்பாத்திரம், ஸ்ரீதேவியின் மயில் கதாப்பாத்திரம் என காலத்திற்கும் பேசப்பட்டு வரும் கதாப்பாத்திரமாக மூவருக்கும் இத்திரைப்படம் அமைந்தது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகையில் ஒரு காட்சியில் வயதான வைத்தியர் கதாப்பாத்திரத்திற்கு நடிக்க ஆள் கிடைக்கவில்லை. அது கர்நாடகா பகுதி என்பதால் பலருக்கும் தமிழ் தெரியவில்லை. உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் அப்பகுதியில் இருந்த பலரையும் அழைத்து வந்து ஒத்திகை பார்த்திருக்கிறார். ஆனால் ஒருவர் கூட சரியாக பொருந்தவில்லை.

இரவு நெடு நேரம் ஆகிவிட்டிருந்தபடியால் பாரதிராஜா பாக்யராஜை அழைத்து அந்த வயதான வைத்தியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கச் சொல்லியிருக்கிறார். “வயதான கதாப்பாத்திரமா? என முதலில் தயங்கிய பாக்யராஜ் அதன் பின் இயக்குனரே கேட்டுவிட்டபடியால் சரி என தலையாடியிருக்கிறார்.

வயதான வைத்தியருக்குரிய வேடம் அணிந்து பாக்யராஜ் வந்து நிற்கையில் கமல் ஹாசன் அவரை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். “என்ன சார்,  இவரை நடிக்க வைக்குறீங்க, சரியா வருமா. வசனத்தை சொதப்பி வைக்கப்போகிறார்” என கூறிக்கொண்டே போக பாக்யராஜ்ஜிற்கு பதற்றம் வந்துவிட்டது.

அதன் பின் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். அதாவது ஸ்ரீதேவிக்கு உடல்நிலை சரியில்லை. கமல் வைத்தியரை கூப்பிட்டு வருகிறார். வைத்தியர் கமலிடம் இந்த இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் எனவும் நெற்றியில் பத்து போட வேண்டும் எனவும் கூறி “இத்தனை நாளா இவ ஆத்தாவுக்கு கூட ஒத்தாசையா இருந்தே, இனி இவளுக்கும் நீ தான்” என்று வசனம் பேச வேண்டும். இது தான் காட்சி.

இதனை ஒத்திகை பார்க்கும்போது பாக்யராஜ்ஜை ஒழுங்காக வசனம் பேச விடாதவாரு கமல் சீண்டிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆதலால் பாக்யராஜ் பதட்டத்தில் உளறிவிட்டார். உடனே கமல் பாரதிராஜாவை பார்த்து “தயவு செய்து இவரை அனுப்பிவிடுங்கள்” என கூற அதற்கு பாக்யராஜ் “சார், ஒத்திகை எல்லாம் வேண்டாம், நேரா டேக் போயிடலாம்” என கூறுகிறார்.

அதன் பின் அந்த காட்சி படமாக்கப்பட, அப்போது பாக்யராஜ் வசனங்களை தெளிவாக பேசிவிட்டு கடைசியில் எழுதப்படாத ஒரு வசனத்தை வேண்டும் என்றே கமலிடம் பேசியுள்ளார். அதாவது “எது சொன்னாலும் சாமி ஆடு மாதிரி தலையை ஆட்டிக்கோ” என கூறியுள்ளார்.

இந்த காட்சி படமாக்கப்பட்ட பின் பாரதிராஜா பாக்யராஜ்ஜிடம் “என்னய்யா கமல் கிட்ட இப்படி பேசிட்ட” என கூற அதற்கு பாக்யராஜ் “என்னைய இவ்வளவு நேரம் அவர் வாரிக்கிட்டு இருந்தார் சார், கடைசில ஒரு கேப் கிடைச்சது. அதுல நான் வாருனேன்” என அசால்ட்டாக கூறியிருக்கிறார். இச்சம்பவத்தை பின்னாளில் ஒரு விழா மேடையில் பாக்யராஜ் பகிர்ந்துகொண்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top