Cinema History
“மகனாக நடித்த நடிகருடன் டூயட் பாடனுமா??”… ‘நோ’ சொன்ன பானுமதி… உள்ளே புகுந்து டிவிஸ்ட் வைத்த என்.எஸ்.கே.
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த பானுமதி, பல திரைப்படங்களில் அழகு தேவதையாக வலம் வந்து சினிமா ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக்கொண்டவர். இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவராக திகழ்கிறார் பானுமதி.
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் பானுமதி. இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கமாட்டேன் என ஒரு முடிவை எடுத்தாராம் பானுமதி. அந்த முடிவுக்கான காரணத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1960 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ராஜா தேசிங்கு”. இத்திரைப்படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கியிருந்தார். லேனா செட்டியார் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
‘நோ’ சொன்ன பானுமதி
“ராஜா தேசிங்கு” திரைப்படம் உருவான தொடக்கத்தில் பானுமதிக்கு ஜோடியாக எஸ்.எஸ்.ராஜேந்திரனை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பத்மினியை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இந்த நிலையில் “ராஜா தேசிங்கு” திரைப்படத்தில் பானுமதி, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
என்ன காரணம் தெரியுமா?
“ராஜா தேசிங்கு” திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஜோடியாக தான் நடித்தால் இந்த படம் வெற்றி பெறாது என கூறினாராம் பானுமதி. ஏன் தெரியுமா?
1956 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பானுமதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ரங்கோன் ராதா”. இத்திரைப்படத்தை காசி லிங்கம் இயக்கியிருந்தார். சி.என்.அண்ணாதுரை இத்திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: பாக்யராஜ்ஜிற்கே தெரியாமல் பல நாட்களாக உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டியராஜன்… பலே கில்லாடிதான்!!
‘ரங்கோன் ராதா” திரைப்படத்தில் சிவாஜிக்கும் பானுமதிக்கும் மகனாக நடித்திருந்தார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனது முந்தைய திரைப்படத்தில் எஸ்.எஸ்.ஆர் தனக்கு மகனாக நடித்திருந்த நிலையில், “ராஜா தேசிங்கு” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக எப்படி நடிக்க முடியும், இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பானுமதி நடிக்க மறுத்துவிட்டார். பானுமதியின் இந்த முடிவால் படப்பிடிப்பு தடைப்பட்டு நின்றது.
சுமூகமாக தீர்த்து வைத்த என்.எஸ்.கிருஷ்ணன்
அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் அந்த படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய என்ன பிரச்சனை? என கேட்டார். அப்போது படக்குழுவினர் பானுமதியின் முடிவை குறித்து கூறினார்கள். உடனே என்.எஸ்.கிருஷ்ணன் “பானுமதி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அவர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடித்தால் சரிவராது. இதற்கு எதுக்கு இவ்வளவு யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி நடிக்கட்டும். எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஜோடியாக பத்மினி நடிக்கட்டும். இப்போது பிரச்சனை தீர்ந்துவிட்டது” என கூறினாராம். இந்த யோசனை நன்றாக இருக்கிறதே என யோசித்த படக்குழுவினர், என்.எஸ்.கே கூறியதுபோல் ஜோடியை மாற்றி நடிக்க வைத்தார்களாம். அதன் பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கியதாம்.