ஒரே ஒரு இருமல் சத்தத்தால் சௌகார் ஜானகியை பின்னுக்கு தள்ளிய பானுமதி… டெரரான ஆளா இருப்பாங்க போலயே!!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் பானுமதி. அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் மேலாக செல்வாக்கு மிக்க நடிகையாக திகழ்ந்தவர் என்று பானுமதியை கூறுவார்கள். அதே போல் மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய நடிகையாகவும் பானுமதி திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆர் இயக்கிய “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் பானுமதி நடித்துக்கொண்டிருந்தார். அதுதான் எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் திரைப்படம். ஆதலால் சில காட்சிகளை இயக்குவதில் எம்.ஜி.ஆர் தயங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் முன்னிலையிலேயே ஒரு முறை “நல்லா டைரக்ட் பண்ணத் தெரிஞ்ச டைரக்டரே கிடைக்கலையா?” என அவரை கேலி செய்தாராம். அந்த அளவுக்கு மிக துணிச்சலான மனதில் பட்டதை பேசிவிடும் நடிகையாக திகழ்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் சௌகார் ஜானகியுடன் ஒரு திரைப்படத்தில், தனது சக நடிகை நடிப்பில் முந்திவிடக்கூடாது என்பதற்காக பானுமதி திட்டமிட்டு செய்த காரியத்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
1962 ஆம் ஆண்டு பானுமதி, சௌகார் ஜானகி ஆகியோரின் முன்னணி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்னை”. இத்திரைப்படத்தின் கதைப்படி சௌகார் ஜானகியின் மகனை பானுமதி வளர்ப்பாராம். ஆனால் சௌகார் ஜானகி தனது மகனை வந்து பார்க்ககூடாது என்று பானுமதி தடுத்துக்கொண்டே இருப்பாராம். அந்த மகனிடம் “நான்தான் உண்மையான தாய்” என்று சௌகார் ஜானகி சொல்லிவிடுவாரோ என்ற பயத்தால் பானுமதி, சௌகார் ஜானகியை மகனிடம் இருந்து தள்ளியே வைத்திருப்பாராம்.
கதை இப்படி இருப்பதால் சௌகார் ஜானகி மீதுதான் படம் பார்ப்பவர்களுக்கு கருணை உணர்வு ஏற்படுமாம். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இந்த விஷயத்தை பானுமதி உணர்ந்துவிட்டாராம். ஆதலால் தன்னை விட சௌகார் ஜானகி ஸ்கோர் செய்துவிடக்கூடாது என்ற காரணத்தால் படப்பிடிப்பில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.
அதாவது ஒரு காட்சியில் மகனுக்கு காய்ச்சல் வந்துவிடுமாம். அப்போது சௌகார் ஜானகி கோவிலுக்கு சென்று அங்குள்ள திருநீறை மகனுக்கு பூசிவிட வேண்டும் என்று நினைத்து தனது மகனை பார்க்க வருவாராம். பானுமதிக்கு தெரியாமல் பின் வாசல் வழியாக இரவு நேரத்தில் வருவாராம்.
அப்போது பானுமதி, மகனின் அருகில் தூங்கிக்கொண்டிருப்பார். அந்த நேரம் பார்த்து மணி 12 ஆக, கடிகாரம் ஓசை எழுப்பிவிடுமாம். அந்த ஓசையில் பானுமதி எழுந்துவிடுவாராம். அப்போது பின் வாசல் வழியாக வந்த சௌகார் ஜானகியை பார்த்துவிடுவார் பானுமதி. கோபத்தில் சௌகார் ஜானகியை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறுவாராம்.
அப்போது சௌகார் ஜானகி மிகவும் வேதனையோடு மிக நீண்ட வசனத்தை பேசுவாராம். இந்த வசனத்தால் பார்வையாளர்களின் கருணை முழுவதும் சௌகார் ஜானகியின் பக்கம்தான் இருக்கும் என்று நினைத்த பானுமதி, அவரை ஸ்கோர் செய்யவிடாமல் தடுக்க தடங்கல் ஏற்படுத்த முடிவெடுத்தாராம்.
அதன்படி, சௌகார் ஜானகி மிகவும் உணர்ச்சிகரமான வசனத்தை பேசிக்கொண்டிருக்கும்போதே பானுமதி வேண்டுமென்றே இருமல் வந்ததுபோல் இருமிவிட்டாராம். ஆதலால் இயக்குனர் கட் சொல்லிவிட்டாராம்.
அத்திரைப்படம் லைவ் ஆடியோவில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் டப்பிங் போகமுடியாது. அதன் பின் அந்த காட்சியில் சௌகார் ஜானகி எந்த இடத்தில் விட்டாரோ அந்த இடத்தில் இருந்து பேசச்சொன்னாராம் இயக்குனர். பானுமதி வேண்டுமென்றே இவ்வாறு செய்தார் என்று இயக்குனருக்கும் தெரிந்திருந்ததாம். அதன் பின் எடிட்டிங்கில் அந்த காட்சியை கொஞ்சம் சரி செய்துவிட்டார்களாம். ஆனால் அந்த காட்சியில் சௌகார் ஜானகியின் நல்ல நடிப்பை பானுமதி கொஞ்சம் காலி செய்துவிட்டார் என்பதுதான் நிதர்சனம்.