Cinema History
மகனுக்கு பால் வாங்க கூட காசு தராமல் ஷூட்டிங் போன பாரதிராஜா!.. வாய்ப்புக்காக இப்படியா!..
மதுரை தேனி மாவட்டத்தில் கொசு மருந்து அடிக்கும் அரசு பணியில் இருந்தவர் பாரதிராஜா. சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தில் ஒரு கன்னட இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார். சில படங்களில் வேலை செய்து சினிமாவை கற்றுக்கொண்டார். அப்போதுதான் மயில் என்கிற கதையை உருவாக்கி பல சினிமா நிறுவனங்களில் ஏறி இறங்கினார். அப்போது இருந்த ஹீரோக்களும் அந்த கதையில் நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில் அந்த கதை ஆர்ட் பிலிம் படம் போல் இருக்கிறது என கூறிவிட்டனர்.
அப்போது பாரதிராஜாவை நம்பி படமெடுக்க வந்தவர்தான் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு. மயில் தலைப்பு பதினாறு வயதினிலே என மாற்றப்பட்டது. ஒண்டி குடித்தனத்தில் இருந்த பாரதிராஜாவின் வீட்டுக்கு ராஜ்கண்ணு வந்தார். தூளியில் அவரது மகன் மனோஜ் தூங்கி கொண்டிருக்க, அந்த குழந்தையின் மேல் ரூ.10 ஆயிரத்தை பணத்தை வைத்துவிட்டு ‘நீ படத்த ஸ்டார்ட் பண்ணுப்பா’ என சொன்னார்.
அப்போது வீட்டில் வறுமை. குழந்தைக்கு பால் வாங்க கொஞ்சம் பணம் கொடுங்கள் என அவரின் மனைவி கேட்க பாரதிராஜாவோ கொடுக்கவில்லை. ‘இது முதலாளி கொடுத்த பணம்’ என சொல்லிவிட்டு படப்பிடிப்பு நடத்த இடத்தை தேர்ந்தெடுக்க மைசூர் சென்றுவிட்டார். ஏனெனில் இன்னும் 3 நாட்களில் படப்பிடிப்பை துவங்கவேண்டும்.
மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது வீட்டின் வறுமையை சொல்லி பாரதிராஜாவின் மனைவி அடிக்கடி கடிதம் எழுதி, மைசூரில் பாரதிராஜா தங்கியிருந்த முகவரிக்கு எழுதுவாராம். அதையெல்லாம் பாரதிராஜா படித்தாலும் வீட்டுக்கு பணம் அனுப்ப மாட்டாராம். ஏனெனில், அவரின் எண்ணம் முழுக்க படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. ஏனெனில் அது அவருக்கு முதல் பட வாய்ப்பு.
தற்செயலாக அந்த கடிதங்கள் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கண்ணில் பட்டுவிட்டது. அதை படித்து பார்த்த அவர் பாரதிராஜாவிடம் ‘உன்னிடம் கொடுத்த பணத்தில் வீட்டு செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்திருக்கலாமே.. சினிமா முக்கியமா? குடும்பம் முக்கியமா?’ என கேட்க, பாரதிராஜாவோ ‘இது சினிமா எடுக்க நீங்கள் கொடுத்தது.. இதில் கொடுக்க மாட்டேன்’ என சொல்ல ஆச்சர்யப்பட்ட ராஜ்கண்ணு பாரதிராஜாவின் வீட்டு செலவுக்கான பணத்தை அவரின் மனைவிடம் சேர்த்துவிட்டார்’.
சினிமா என வந்துவிட்டால் பாரதிராஜா எப்படிபட்டவர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய உதாரணம். அந்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சமீபத்தில் மரணமடைந்தார். பதினாறு வயதினிலே படத்திற்கு பின் கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலே, மகாநதி ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகையுடன் நெருக்கமாக நடிச்சதால் எனக்கு ஆப்படிச்சார் கவுண்டமணி!.. பல வருட பகையை சொன்ன பயில்வான் ரங்கநாதன்..