சிவாஜி செஞ்ச வேலையில் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்திய பாரதிராஜா.. இப்படியெல்லாம் நடந்துச்சா..
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டவர் பாரதிராஜா. ஏனெனில், அப்போதெல்லாம் படப்பிடிப்பு என்பது ஒரு ஸ்டுடியோவில் மட்டுமே நடக்கும். படத்தின் அனைத்து காட்சிகளையும் அங்கேயே எடுப்பார்கள். பாலச்சந்தரின் பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவில் மட்டுமே செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டும். பல இயக்குனர்களும் அதைத்தான் பின்பற்றினார்கள்.
ஆனால், கேமராவை தூக்கிகொண்டு வயல்வெளி பக்கம் சென்றவர் பாரதிராஜா. ஸ்டுடியோவில் இயங்கிய சினிமாவை கிராமத்து பக்கம் கைப்பிடித்து இழுத்து சென்றவர். சினிமா வயல், வரப்பில் நடந்ததே இவரால்தான். இவர் முதலில் இயக்கிய ‘பதினாறு வயதினிலே’ படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. மண் வாசனை மிக்க படங்களையும், கிராமத்து மனிதர்களையும், அவர்களின் பேச்சு, வாழ்க்கை, வழக்கு மொழிகளை ரசிகர்களுக்கு காட்டியவர்.
சிவாஜியை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜியை வேறுமாதிரி காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். எத்தனையோ படங்களில் நவசரங்களை காட்டி நடித்த நடிகர் திலகத்தை மிகவும் இயல்பாக பேசி நடிக்க வைத்திருப்பார். அது சிவாஜிக்கே புதிதாக இருந்தது.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியது. சிவாஜி எப்போதும் விக் அணிந்துதான் நடிப்பார். அவர் விக் இல்லாமல் நடித்த படங்கள் மிகவும் குறைவு. அன்று சிவாஜி படப்பிடிப்புக்கு திரிசூலம் பட கெட்டப்பில் வந்துள்ளார். அதைப்பார்த்து அப்செட் ஆன பாரதிராஜா அங்கிருந்து சிறிது தூரம் போய் நின்று சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் காலியாகிறது. சிவாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. முதல் ஷாட் வைக்கும் முகூர்த்த நேரமும் தாண்டி போய்விட்டது. பாரதிராஜா ஏதோ கோபத்தில் இருக்கிறார் என்பது மட்டும் சிவாஜிக்கு புரிகிறது.
சிறிது நேரத்தில் பேக்கப் என பாரதிராஜா கத்திவிட்டார். முதல் நாள் ஒரு காட்சி கூட எடுக்காமல் பேக்கப்பா?.. இன்னும் காலை சாப்பாடு கூட சாப்பிடவில்லை என எல்லோருக்கும் அதிர்ச்சி. சரி இயக்குனர் சொல்லிவிட்டார் என எல்லோரும் சாப்பிட சென்றனர். சிவாஜி மேக்கப்பை கலைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தார். அப்போது அங்கு பாரதிராஜா சிவாஜியை பார்த்து ‘அண்ணே எனக்கு இதுதான் வேணும். வாங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவோம்’ எனக்கூறி அவரை அழைத்து சென்று அவரை சிரிக்க வைத்தும், நடக்க வைத்தும் படப்பிடிப்பை நடத்தியுள்ளர்.
கதையே சொல்லாமல்தான் சிவாஜியை பாரதிராஜா நடிக்க வைத்தார். டப்பிங் பேசும் போது கூட சிவாஜி கோபத்தில்தான் இருந்தாராம். ஆனால், டப்பிங்கை முடித்துக்கொடுத்தார். இந்த படம் ஓடாது என இளையராஜா சொல்லிவிட்டு அவருக்கான சம்பளத்தை கூட வாங்கவில்லை. ஆனால், பாரதிராஜாவுக்கு நம்பிக்கை இருந்தது. படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. முழுபடத்தையும் பார்த்த சிவாஜி ‘டே கிளாசிக் கல்ட் படத்தை எடுத்திருக்க.. இப்படி வரும்னு நான் எதிர்பாக்கல’ என மனமுவந்து பாராட்டினாராம்.
தமிழ் திரையுலகில் முதல் மரியாதை திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை.