தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் பாரதிராஜா தமிழ் திரைப்படங்கள் ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த நிலையில் வயல் வரப்புகளில் படங்களை எடுத்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் பாரதிராஜா. இவர் முதலில் இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தின் வெற்றி சினிமா உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
அதன்பின்னர்தான் பல இயக்குனர்களும் தைரியமாக அது போன்ற படங்களை எடுக்க முன்வந்தார்கள். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், கோபம், வன்மம், குரோதம் உள்ளிட்ட பல விஷயங்களையும் தனது திரைப்படங்களின் காட்டினார் பாரதிராஜா.
இவர் இயக்கிய அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, மண்வாசனை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களாக இருக்கிறது. பாரதிராஜாவுக்கு தற்போது 84 வயது ஆகிறது. அவரின் மகன் மனோஜ் குமார் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து போனார். தனது ஒரே மகன் இறந்த துக்கத்தை பாரதிராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பலரும் ஆறுதல் சொல்லியும் அவரின் மனம் ஆறவில்லை.
அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நலம் நன்றாக இருப்பதாக அவர் குடும்பத்தார் தெரிவித்தார்கள். இந்நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எப்போதும் தனது மகன் மனோஜின் புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டே இருக்கிறார். மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
எனவேஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக அவரை மலேசியாவில் உள்ள அவரின் மகள் வீட்டு அழைத்து சென்றோம். அங்கும் அவரின் மனநிலை மாறவில்லை. தற்போது அவருக்கு நினைவெல்லாம் போய்விட்டது. எல்லாவற்றையும் மறந்து விட்டார். மகன் இல்லை என்பது மட்டும்தான் அவரது நினைவில் இருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்.