ரசிகர்கள் தூங்கிட்டு இருக்கும்போது நான் அப்படி செஞ்சது தப்புதான்- பாரதிராஜா கொடுத்த வித்தியாசமான பதில்!
பாரதிராஜா தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக திகழ்ந்தவர். அதுவரை வழக்கமான ஹீரோயிச கதைகளே வெளிவந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் கிராமங்களை நோக்கி கேமராக்களை திருப்பியவர். அவரது முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையையே உண்டு செய்தது.
இப்போதும் கூட பாரதிராஜாவின் ரசனை இளமையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான “மாடர்ன் லவ் சென்னை” வெப் சீரீஸில் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் பாரதிராஜாவிடம் “உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். அதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு பதிலை பாரதிராஜா அளித்தாராம்.
அதாவது, “ஓரு டெக்னீசியன் என்ற முறையிலே இந்த திரையுலகில் பல அற்புதமான விஷயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே போல் திரை ரசிகர்கள் எப்போது முழித்துக்கொண்டு இருக்கிறார்கள், எப்போது தூங்குவார்கள் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.
அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது சுமாரான படங்களையும் அவர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது நல்ல படங்களையும் கொடுத்தோம் என்றால் நமக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் நான் மாற்றிக்கொடுத்துவிட்டு பல சமயங்களில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய பலத்தின் பலவீனம்” என்று கூறினாராம். இந்த பதில் பலரையும் ரசிக்கவைத்ததாம்.