பாரதிராஜா நிராகரித்த உதவி இயக்குனர்… பின்னாளில் இயக்குனர் இமயமே அசந்துப்போன நடிகர்… யார்ன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று புகழப்பட்ட பாரதிராஜா, 1980களில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக்காட்டியவர் பாரதிராஜாதான் என்று கூறினாலும் அது மிகையாகாது.
பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் “16 வயதினிலே” என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இப்படியும் படம் எடுக்கலாமா? என்று பலரையும் ஆச்சரியப்படுத்திய திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் மொழியே மாற்றம் பெற்றது என்றுகூட சொல்லலாம்.
அதன் பின் பாரதிராஜா இயக்கிய “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற திரைப்படங்களின் வெற்றி அவரை தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக ஆக்கியது. தமிழ் நாட்டு கிராமங்களில் பல இளைஞர்கள் பாரதிராஜா படங்களை பார்த்துவிட்டு “நானும் படம் எடுக்கப்போகிறேன்” என்ற கனவோடு சென்னைக்கு படையெடுத்தனர். அந்த அளவுக்கு சினிமா கனவோடு வலம் வந்தவர்களின் ஆதர்ச இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்தார்.
அக்காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் எப்படியாவது உதவி இயக்குனராக சேரவேண்டும் என்று பலரும் அவரது அலுவலகத்திற்கு முன்பு தேவுடு காத்திருப்பார்களாம். ஆனால் சிலருக்கே அந்த வாய்ப்பு கிட்டியது. பலருக்கும் அது எட்டாக்கனியாகவே இருந்தது.
அப்போது தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தார் ஒரு இளைஞர். அவர் பல முறை பாரதிராஜாவை சந்தித்து “என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்” என கேட்டிருக்கிறார். ஆனால் பாரதிராஜாவிடம் அப்போதே 15 க்கும் மேல் உதவி இயக்குனர்கள் இருந்தார்களாம். ஆதலால் அந்த இளைஞரை அவர் சேர்த்துக்கொள்ளவில்லையாம்.
அதன் பின் அந்த இளைஞர் மிகவும் போராடி, வஸந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து இரண்டு திரைப்படங்களை இயக்கிய அவர், பல திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்பு மிகவும் புகழப்பட்டது. தற்போது கூட “எதிர்நீச்சல்” என்ற சீரீயலில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட பாரதிராஜா அவரின் நடிப்பை பெரிதும் பாராட்டினாராம். இதனை கேள்விப்பட்ட அவர், பாரதிராஜாவை நேரில் சந்தித்து, “உங்களுக்கும் எனக்கும் 30 ஆண்டுகள் பந்தம் இருக்கிறது” என கூறியிருக்கிறார். அதற்கு அவர் “அப்படியா?” என்று கேட்க, பல வருடங்களுக்கு முன்பு அவரிடம் உதவி இயக்குனராக வாய்ப்புக் கேட்டு அவரை தினமும் சென்று பார்த்த கதையை கூறியிருக்கிறார். அதனை கேட்டுக்கொண்டிருந்த பாரதிராஜா “ஓ அந்த ஆளா நீ. நல்ல வேள நீ என் கிட்ட அசிஸ்டன்ட்டா சேரல. இப்போ பாரு நீ எவ்வளவு நல்ல நடிகன் ஆகிட்டன்னு” என்று கூறி பாராட்டினாராம்.
அந்த நடிகர் யாரென்றால், தற்போது இணையத்தில் மிக டிரெண்டிங்காக வலம் வந்துகொண்டிருக்கும் ஜி.மாரிமுத்துதான் அவர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இருமல் சத்தத்தால் சௌகார் ஜானகியை பின்னுக்கு தள்ளிய பானுமதி… டெரரான ஆளா இருப்பாங்க போலயே!!