ஹீரோ இவர்தான்னு சொல்லி நடிகைக்கு ஷாக் கொடுத்த பாரதிராஜா!. பாக்கியராஜ் ஹீரோ ஆன கதை இதுதான்..

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர்களில் பாரதிராஜா முக்கியமானவர். நாடக பாணியில் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த சினிமாவை இயல்பான உரையாடல் மூலம் மாற்றியவர் ஸ்ரீதர் எனில், ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கி வந்த தமிழ் சினிமாவை வெளியே அழைந்து வாய்க்கால், வரப்புகளில் உலவ விட்டவர் பாரதிராஜாதான்.
கிராமத்து மனிதர்களின் எல்லா உணர்வுகளையும் தனது படங்களில் பிரதிபலித்தார். அதேபோல், சினிமாவில் ரஜினி உட்பட பல நடிகர்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர் எனில் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர் பாரதிராஜா. ராதிகா, ராதா, ரதி, ரேகா, அருணா, ரஞ்சினி என பெரிய பட்டியலே இருக்கிறது.
இதையும் படிங்க: பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…
தனது முதல் படத்தில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்க திட்டமிட்டார் பாரதிராஜா. ஆனால், படத்தின் வியாபாரத்துக்கு அறிமுகமான நடிகர்கள் தேவைப்பட்டதால் ரஜினி, கமல், ஸ்ரீதேவியை புக் பண்ணினார். அப்படி உருவான படம்தான் பதினாறு வயதினிலே. இந்த திரைப்படம் தமிழ் சினிமா உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இரண்டாவதாக கிழக்கே போகும் ரயில் எடுத்தபோது ராதிகா, சுதாகர் என புதுமுகங்களை அறிமுகம் செய்து ஹிட் கொடுத்தார். மூன்றாவதாக அவர் இயக்கிய படம்தான் புதிய வார்ப்புகள். இந்த படத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ரதி அக்னிஹோத்ரியை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார். படத்திற்கு ஹீரோ யாரும் அமையவில்லை. எனவே, தனது உதவியாளர் பாக்கியராஜை ஹீரோவாக நடிக்க வைப்பது என முடிவு செய்தார்.
இதையும் படிங்க: மூன்று முடிச்சு படத்தில் ரஜினி சொன்ன பொய்… குருநாதருக்காக உயிரை விட துணிந்த ஆச்சரியம்…
ஆனால், ஒரு உதவி இயக்குனரை தனக்கு ஜோடி ஆக்குகிறார் என தெரிந்தால் ரதி நடிக்கமாட்டார் என்பதால் அவரிடம் எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு போனபிறகுதான் பாக்கியராஜ் ஹீரோ என ரதிக்கு தெரிய வந்தது. இதில் அவருக்கு கோபம் வந்தாலும் முதல் படம் என்பதால் ஒருவழியாக நடித்து முடித்தார்.
இந்த படமும் பாரதிராஜாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல், நடிப்பு வேண்டாம் இயக்கம் மட்டுமே போதும் என முடிவு செய்திருந்த பாக்கியராஜையும் இந்த படம் ஒரு நடிகராக மாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அதன்பின் ரஜினி, கமல் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஹிந்தியில் கமலுக்கு ஜோடியாக ஏக் துஜே கேலியே படம் சூப்பர் ஹிட் அடித்து பெரிய லெவலுக்கு போனார் என்பது குறிப்பிடத்தக்கது.