உங்களை நம்பி படம் பார்த்தவனெல்லாம் முட்டாள்!.. சசிக்குமாரையும் விட்டு வைக்காத புளூசட்ட!..

by சிவா |   ( Updated:2025-05-03 08:41:28  )
sasikumar
X

சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் சசிக்குமார். இவர் மதுரையை சேர்ந்தவர். கொடைக்கானலில் படித்தவர். சிறு வயது முதல் சினிமா இயக்கத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சுப்பிரமணியபுரம் கதையை ஒரு பீரீயட் கதையாகவே எடுத்திருந்தார். நட்புக்காக கொலை செய்து, அதனால் சிறை சென்று, பின் அதுவே வேலையாக மாற அவர்கள் என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

காதலும் நட்பும் புனிதமானது. காதலுக்காக ஒரு பெண் தனது குடும்பத்தையே எதிர்ப்பார். நட்பு நம்பிக்கை துரோகம் செய்யாது என காலம் காலமாக தமிழ் சினிமாவால் உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தை மொத்தமாக உடைத்திருந்தார் சசிக்குமார். இதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதோடு, இப்படம் தமிழ் சினிமாவை புரட்டி போட்டது என்றும் சொல்லலாம்.

அதன்பின் ஈசன் என்கிற படத்தை இயக்கினார் சசிக்குமார். அதோடு சரி. அதன்பின் சினிமாவில் நடிகராக பிஸியாகிவிட்டார். பல படங்களிலும் நடித்தார். இதில் நாடோடிகள், சுந்தரபாண்டியன், வெற்றிவேல், குட்டிப் புலி, கிடாரி போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.

tourist family
tourist family

ஒருபக்கம் சில கதைகளை எழுதி படம் இயக்கவும் முயற்சி செய்தார். ஆனால், நடிகர்கள் சரியாக அமையவில்லை. ஜோதிகாவுடன் உடன்பிறப்பே என்கிற படத்திலும் நடித்திருந்தார். சூரி கதாநாயகனாக நடித்திருந்த கருடன் படத்திலும் நடித்திருந்தார். அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் எடுத்து பல கோடி நஷ்டம் அடைந்து கடனாளியாக மாறினார். அந்த கடனை அடைக்க சில மொக்கைப் படங்களிலும் நடித்தார்.

இப்போது அவரின் நடிப்பில் வெளியாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசியுள்ள சசிக்குமார் ‘கடன் பிரச்சனையால் எனக்கு பிடிக்காத படங்களில் நடித்தேன். ஒரு சில படம் நடிக்கும்போதே ஓடாது என தெரிந்தும் நடித்தேன். என் கடன் பிரச்சனை தீர்ந்தபின் அயோத்தி, கருடன், நந்தன், டூரிஸ்ட் பேமில் போல எனக்கு பிடித்த கதைகளில் நடித்தேன்’ என சொல்லியிருந்தார்.

இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘கடனை அடைக்க ஓடாதுன்னு தெரிஞ்சும் மொக்கை படங்களில் நடித்தீர்களே.. உங்களை நம்பி அதை பணம் தந்து பார்த்தவர்கள் எல்லாம் இளிச்சவாய் முட்டாள்கள். அப்படித்தானே?’ என கோபமாக பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ‘அவர் ஒன்றும் இந்த படத்தை பாருங்கள் என யாரையும் அழைக்கவில்லயே.. நீங்கள் உங்கள் யுடியூப் சேனலில் விளம்பரம் போடுவதில்லையா?. அது எல்லாமே சிறந்ததா?’ நெட்டிசன்கள் சசிக்குமாருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Next Story