“கார்த்தி உள்ள இருக்காரா??”… வெகு நேரம் காத்திருந்த பாலிவுட்டின் டாப் நடிகர்… கெத்து காட்டுறாரேப்பா!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முதல் திரைப்படத்திலேயே தனது வசீகரமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த கார்த்தி, ரசிகர்களின் மனதில் ஒரு தனித்த இடத்தையும் பிடித்தார்.
அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்”, “பையா”, “சிறுத்தை”, “மெட்ராஸ்”, “கொம்பன்”, “கைதி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாக வளர்ந்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்”, “சர்தார்” போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து கார்த்தி தற்போது “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார். “ஜப்பான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலிவுட்டின் டாப் நடிகர் ஒருவர் கார்த்தியை சந்திக்க வெகுநேரம் காத்திருந்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அவர் கார்த்தியை பார்க்க ஆவலோடு காத்திருந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?
நடிகர் கார்த்தி சில நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றிருக்கிறார். அங்கே உள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது, பாலிவுட்டின் டாப் நடிகரான வருண் தவான் அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்திருக்கிறார். அப்போது படப்பிடிப்புத் தளத்திற்குள் செல்ல முனைந்தபோது வருண் தவானை அங்கிருந்தவர்கள் தடுத்தி நிறுத்தி, உள்ளே விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது என கூறினார்களாம்.
இதையும் படிங்க: “நீ நடிகனாகனுமா? வேண்டாமா?”… உலக நாயகனை உசுப்பேத்திவிட்ட ஜெய்ஷங்கர்… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??
யார் நடிக்கிறார்? என்று வருண் தவான் கேட்க, அதற்கு அங்கிருந்தவர்கள் கார்த்தி என்ற தமிழ் நடிகர் நடித்துக்கொண்டிருக்கிறார் என கூறினார்களாம். அதை கேட்ட வருண் தவான், “கைதி படத்தில் நடித்தாரே? அந்த கார்த்தியா?” என்று கேட்டு விசாரித்துவிட்டு, கார்த்தியை பார்த்தே ஆகவேண்டும் என படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தாராம். அதன் பின் கார்த்தி வெளியே வந்த பிறகு அவரை பார்த்து “கைதி” திரைப்படம் குறித்து பல விஷயங்கள் பேசிவிட்டுத்தான் சென்றாராம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “கைதி” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் “கைதி” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.