Dude: பைசனை விட 5 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பும் டியூட்!..

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதனை லவ் டுடே திரைப்படம் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த டிராகன் படமும் பிரதீப்புக்கு ஒரு மெகா வெற்றிப் படமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட், ஆனால் அதிக லாபம் என்கிற ஃபார்முலாவை பிரதீப் ரங்கநாதரின் படங்கள் கொண்டிருக்கிறது.
எனவே பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்கிற படத்திலும் பிரதீப் நடித்திருக்கிறார். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகவிருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேண்டாம் என டிசம்பர் 28ம் தேதிக்கு அது தள்ளிப்போனது.
தற்போது வெளியாகியுள்ள டியூட் திரைப்படம் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு முறை பார்க்கலாம்.. பல காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது. அதேநேரம் 20லிருந்து 25 வயதிற்கு உட்பட்ட, Gen Z என சொல்லப்படும் 2k கிட்ஸ் இளைஞர்களுக்கு டியூட் படம் மிகவும் பிடித்திருக்கிறது. லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை அவர்கள் எப்படி கொண்டாடினார்களோ அப்படியே டியூட் படத்தையும் அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
காதல் குடும்ப செண்டிமெண்ட், காமெடி கலந்த ஒரு ஜாலியான படமாக டியூட் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜும் நடித்திருக்கிறார். சரத்குமாருக்கு இதுவரை நடிக்காத, வித்தியாசமான வேடத்தில் நடித்து கைத்தட்டலை வாங்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். ஒரு பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் பேசப்படவில்லை. பின்னணி இசையும் சிறப்பாக இல்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்கிற விமர்சனம் வந்தாலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் நாள் இப்படம் 20 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் டியூட் திரைப்படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் 10 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதில் உலக அளவிலான வசூலையும் சேர்த்தால் இந்த படம் இரண்டு நாட்களில் 35 கோடியை தாண்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் 50 கோடி வசூலை தாண்டி விடும்.
ஒருபக்கம், மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து டியூட் படத்திற்கு போட்டியாக வெளியான பைசன் திரைப்படம் இரண்டு நாட்களில் ஆறு கோடி மட்டுமே வசூல் செய்திருக்கும் நிலையில் டியூட் திரைப்படம் அதைவிட 5 மடங்கு வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.