6 நாளில் கேம் சேஞ்சர் வசூல் இவ்வளவுதான்!.. பல கோடி நஷ்டம்.. ஷங்கர் நிலமை மோசம்தான்..
Game Changer: கோலிவுட்டில் அதிக பட்ஜெட் படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் ஷங்கர். எல்லோரும் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றே அழைக்கிறார்கள். ஆனால், அவருக்கு பின் அவரின் சிஷ்யர் அட்லி, ராஜமவுலி, லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும் ஷங்கர் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்தியன் 2: ஆனால், கடந்த சில வருடங்களாகவே அவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி 148 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வி அடைந்தது. நல்லவேளையாக தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையில் லைக்காவுக்கு ஓரளவுக்கு லாபம் வந்தது. ஆனாலும், இந்தியன் 2 அவர்களுக்கு நஷ்டம்தான்.
கொரோனா லாக் டவுனுக்கு பின் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார் ஷங்கர். ஆந்திராவில் அதிக பட்ஜெட்டில் படங்களை உருவாக்கும் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவானது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்தார்கள். கடந்த 10ம் தேதி இப்படம் வெளியானது.
கார்த்திக் சுப்பாராஜ்: தமிழ் சினிமா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் எழுதிய கதை இது. மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அவர் உருவாக்கிய கதை என சொல்லப்படுகிறது. இந்த கதைக்கு திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கினார் ஷங்கர். ஐந்தரை மணி நேரம் ஓடும் அளவுக்கு காட்சிகளை எடுத்து அதை இரண்டரை மணி நேரமாக குறைத்தார்.
அதிலேயே செலவு செய்த பல கோடிகள் வீணாய் போனது. 15 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட ‘லைரனா’ பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. அதோடு, ஏற்கனவே வந்த பல படங்களின் காட்சிகளையும் படம் நினைவுப்படுத்துகிறது. 20 நிமிட பிளாஷ்பேக் காட்சியை தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என விமர்சனம் வந்தது.
450 கோடி பட்ஜெட்: படம் வெளியாகி 5 நாட்களில் கேம் சேஞ்சர் இந்தியாவில் 106.15 கோடியையும், 6வது நாளான நேற்று இப்படம் 6.50 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 450 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால், இப்படியே போனால் அதிகபட்சம் இப்படம் 200 கோடியை வசூல் செய்து ஒரு தோல்விப்படமாகவே அமைய வாய்ப்பிருக்கிறது. இத்தனைக்கும் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையில் இப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், அங்கேயே இப்படத்திற்கு பெரிய வசூல் இல்லை.
ஒருபக்கம், தமிழகத்தில் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - சந்தானம் நடித்து வெளியாகியுள்ள மத கஜ ராஜா படத்துக்கு தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல், பாலாவின் வணங்கான் படத்திற்கும் ஓரளவுக்கு வசூல் இருப்பது குறிப்பிடத்தக்கது.