வசூலை அள்ளிக் குவிக்கும் காந்தாரா 2… காத்து வாங்கும் இட்லி கடை!.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..
Idli kadai Vs Kantara 2: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த 1ம் தேதி வெளியானது. அதேபோல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா 2 திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியானது. இட்லி கடை படத்தை பொருத்தவரை அது ஒரு ஃபீல் குட் படமாக வெளிவந்திருந்தது. தனுஷ் சிறுவயதில் தனது சொந்த ஊரில் பார்த்த இட்லி கடை, அது தொடர்பான மனிதர்கள், அதோடு கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இளைஞர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம், பெற்றோர்களுக்காக தியாகம் செய்வது, அவர்களின் கனவை வாழ்ந்து காட்டுவது என பல நல்ல விஷயங்களை இந்த படத்தில் தனுஷ் பேசியிருக்கிறார்.
அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகள் இல்லாமல், பன்ச் வசனம் பேசாமல் இந்த படத்தை எடுத்திருக்கிறார் தனுஷ். அந்த பக்கம் மூன்று வருடங்களுக்கு முன்பு காந்தாரா வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருக்கிறார் ரிஷப் செட்டி. இந்த படத்தில் சண்டைக் காட்சிகளும், போர் காட்சிகளும் பாராட்டைப் பெற்றது.
எதிர்பார்ப்பு காரணமாக காந்தாரா 2 படம் முதல் நாளே 50 கோடி வசூலை தாண்டியது. இரண்டாம் நாள் 100 கோடி வசூலை தாண்டியது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. குறிப்பாக கன்னடத்தில் வெளியான படம் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்தியாவில் 130 கோடியும், ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளில் 20 கோடியையும் இப்படம் வசூல் செய்திருக்கிறது.
4ம் நாளான இன்று இப்படம் 200 கோடி வசூலை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. அந்த பக்கம் இட்லி கடைக்கு போனால் அந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தும் கூட பெரிய வசூலை பெறவில்லை. முதல் நாள் 11 கோடி, இரண்டாம் நாள் 9.75 கோடி, மூன்றாம் நாள் 5.6 கோடி நான்காம் நாள் 6.15 கோடி என 4 நாட்களில் மொத்தம் 32.50 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
இன்று அதிகபட்சமாக 6 அல்லது 7 கோடி வசூல் செய்தால் இப்படம் 40 கோடி வசூலை தொடும். அனேகமாக திங்கட்கிழமை முதல் இந்த படத்திற்கு பெரிய வசூல் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. ஆனால் காந்தாரா 2 படம் 500 கோடி வசூலை தாண்டி விடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
