
Box Office
2025-ல் வசூலை அள்ளிய 5 திரைப்படங்கள்!.. கூலியை தாண்டுமா காந்தாரா 2?….
2025 Movies: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. பல ஆயிரம் கோடிகள் திரைப்படங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், எல்லா திரைப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. 50 சதவீத படங்கள் கூட வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. இந்நிலையில், 2025ம் வருடத்தில் இதுவரை அதிக வசூலை அள்ளிய திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.

2025ல் இந்தியாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக Chhaava ஹிந்தி படம் இருக்கிறது. உலக அளவில் இப்படம் 800 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியான இந்த படத்தில் விக்கி கவுசல், அக்ஷய் கண்ணா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதுவரை இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை.
2வது இடத்திலும் ஒரு ஹிந்தி படமே இருக்கிறது. காதல் கதையாக வெளிவந்த Saiyaara படம் உலக அளவில் 570 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் அஹான் பண்டே, அநீத் பாடா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த வருடம் ஜுலை மாதம் இப்படம் வெளியானது.

3வது இடத்தில் ரஜினியின் கூலி படம் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் 500 கோடி வசூல் செய்தது. இப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என பில்டப் செய்யப்பட்ட நிலையில் அதில் பாதியை மட்டுமே படம் வசூலித்தது. இந்த படத்திற்கு பின் ரஜினி – கமல் நடிக்க ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என செய்திகள் உலாவந்து கொண்டிருக்கிறது.

4வது இடத்தில் காந்தாரா 2 படம் இருக்கிறது. காந்தாரா ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியானது. கடந்த 2ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 6 நாட்களில் மட்டும் உலக அளவில் 427.5 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்திற்கு வசூல் வரும் என்பதால் கண்டிப்பாக இப்படம் 600 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

5வது இடத்தில் மலையாள படமான LOKAH இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டியது. மலையாள சினிமா உலகில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை லோகா பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு முன் மோகன்லாலின் எம்புரான் படம் அந்த இடத்தில் இருந்தது. இந்த வருடம் முடிய இன்னும் 80க்கும் மேற்பட்ட நாட்கள் இருப்பதால் வெளியாகும் படங்களின் வசூலை பொறுத்து இந்த வரிசை மாறவும் வாய்ப்பிருக்கிறது.