பொங்கலுக்கு வெளியான 5 படங்கள்! கப் அடித்த மதகஜராஜா! மொத்த வசூல் ரிப்போர்ட்!..
Pongal Release movies: தீபாவளி, பொங்கல் என்றாலே புதுத்துணி மட்டுமில்லாமல் புதிய திரைப்படங்களும் வெளியாகும். அதிலும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். 80,90களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன், சத்தியராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி எல்லா படங்களுமே 100 நாட்கள் ஓடும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி திரைப்படங்கள் ஓடுவதில்லை.
விடாமுயற்சி: அதிகபட்சம் 50 நாட்கள் ஓடினாலே ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. எனவே, படம் வெளியான 2 வாரத்தில் வசூலை எடுத்துவிட வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் கணக்காக இருக்கிறது. இந்த பொங்கலுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு பின் பின்வாங்கிவிட்டது.
கேம் சேஞ்சர்: விடாமுயற்சி படம் பின் வாங்கியதால் சின்ன படங்கள் பொங்கல் ரேஸில் குதித்தது. ஷங்கரின் கேம் சேஞ்சர் மட்டுமே பொங்கல் ரேஸில் பெரிய படமாக வெளிவந்தது. ஆந்திர தயாரிப்பாளர் தில் ராஜு 450 கோடி செலவில் உருவாக்கிய இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி 12 நாட்களில் 180.45 கோடியை மட்டுமே வசூல் செய்து ஒரு தோல்விப்படமாக மாறியிருக்கிறது.
வணங்கான்: கேம் சேஞ்சர் படத்தோடு வெளியானது பாலாவின் வணங்கான். பாலாவின் படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்டதால் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், அருண் விஜய்க்கும் இந்த படத்தின் வெற்றி தேவையாக இருந்தது. படம் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் சுமாரான வசூலை இப்படம் பெற்றது. 12 நாட்களில் இப்படம் 8 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நேசிப்பாயா: மறைந்த நடிகர் முரளின் மகன் ஆகாஷும், அதிதி ஷங்கரும் இணைந்து நடித்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான நேசிப்பாயா திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டது. இப்படம் ஒரு கோடியை கூட வசூல் செய்யவில்லை. அதேநேரம், சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்து 12 வருடங்களுக்கு முன்பு உருவாகி ரிலீசாகாமல் கிடப்பில் கிடந்த மதகஜராஜா திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
காதலிக்க நேரமில்லை: மேலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியும், நித்யா மேனனும் முக்கிய வேடத்தில் நடித்து 14ம் தேதி வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் 9.5 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு 10 கோடியில் உருவாகி 50 கோடி வசூல் செய்துள்ள மதகஜராஜா படமே கப் அடித்து வெற்றி பெற்றிருக்கிறது.