Dude: மதராஸி 14 நாள்.. டியூட் 6 நாள்.. திடீர் தளபதிக்கு டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்...

சினிமா உலகில் எப்போது எந்த நடிகருக்கு யார் போட்டியாக வருவார் என சொல்லவே முடியாது. திடீரென ஒரு நடிகர் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வேகமாக வளர்ந்துவிடுவார். அதோடு, அவருக்கு முன் சினிமாவுக்கு வந்து பல படங்கள் நடித்து நடிகர்கள் பிடித்த இடத்தை விட வேகமாக மேலே போய்விடுவார். சினிமாவில் பெரிய நடிகர்களே தோல்விப்படங்களை கொடுப்பார்கள்.
அதேநேரம் ஒரு அறிமுக இயக்குனர் இயக்கிய படம் சூப்பர் ஹிட் அடித்துவிடும். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் பிளாப் ஆகும். 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 100 கோடி வசூல் செய்துவிடும். இங்கே எதையும் கணிக்க முடியாது. ரசிகர்களுக்கு பிடிக்கும்படி கதை அமைய வேண்டும்.. அவ்வளவுதான்.
விஜய் டிவியில் ஆங்கராக தனது கரியரை துவங்கி அப்படியே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி தனக்கு முன் சினிமாக்கு வந்த சீனியர் நடிகர்களை ஓவர் டேக் செய்து மேலே போனவர்தான் சிவகார்த்திகேயன். ஒரு கட்டத்தில் ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறினார்.
இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. எனவே அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என பலரும் பேச தொடங்கினார்கள். அதோடு விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவரின் இடத்தை சிவகார்த்திகேயனே பிடிப்பார் என்றும் பலரும் பேசினார்கள். அதை சிவகார்த்திகேயன் தன்னடக்கத்தோடு மறுத்தாலும் அவருக்கு அந்த ஆசை இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதனால், புளூசட்டை மாறன் போன்ற சிலர் அவரை ‘திடீர் தளபதி’ என்று கிண்டலடிப்பதும் உண்டு.
ஒருபக்கம் கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே, டிராகன் ஆக இரண்டு படங்களின் மூலம் நடிகராக மாறி ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும், சமீபத்தில் வெளியான டியூட் படமும் அவருக்கு ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
அதாவது முருகதாஸ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை செய்ய 14 நாட்கள் ஆனது. ஆனால் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் 6 நாட்களில் 100 கோடி வசூலை தாண்டி விட்டது. எனவே சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்கும்படி ஒரு நடிகர் வந்துவிட்டார் என கோலிவுட்டில் பேச துவங்கி விட்டனர்.