1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மட்டுமல்லாமல் காலத்தை தாண்டியும் ரசிக்கப்படும் திரைப்படமாகவும் அமைந்தது.

“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.
சிவாஜியை வைத்து கிட்டத்தட்ட 7 திரைப்படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலுவுக்கு எம்.ஜி.ஆரை வைத்து இயக்க முதன்முதலில் வாய்ப்பு கிடைக்கிறது. எம்.ஜி.ஆரிடம் கதை சொல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற பந்துலு, எம்.ஜி.ஆரிடம் மொத்த கதையையும் கூற, எம்.ஜி.ஆருக்கு அக்கதை மிகவும் பிடித்துப்போனது.

அதன் பின் பந்துலு “உங்களுக்கு எவ்வளவு தொகை அட்வான்ஸாக வேண்டும்?” என கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர், “நான் கேட்கின்ற தொகையை உங்களால் தரமுடியுமா?” என கேட்டிருக்கிறார்.
“அதனால் என்ன, தாராளமாக தருகிறேன், எவ்வளவு வேண்டும்” என கூறியிருக்கிறார் பந்துலு. உடனே எம்.ஜி.ஆர் “எனக்கு ஒரு ரூபாய் அட்வான்ஸாக வேண்டும்” என கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் அவ்வாறு கூறியவுடன் தனது சட்டைப் பையில் தேடிப் பார்த்திருக்கிறார் பந்துலு. ஒரு ரூபாய் தென்படவே இல்லை.

அதன் பின் வெளியே சென்று தன்னுடைய கார் டிரைவரிடம் “ஒரு ரூபாய் இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு டிரைவர் உடனே தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை எடுத்து தந்திருக்கிறார். இவ்வாறு “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு பி.ஆர்.பந்துலுவின் கார் டிரைவர் எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜியின் 100 ஆவது படத்துக்கு நடந்த போட்டி… நடிகர் திலகத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்ட பிரபல இயக்குனர்…
