Categories: latest news

விஜய்க்கு வந்த அதே பிரச்சனை இப்ப ரவி மோகனுக்கும்!.. புதுசு புதுசா கிளம்புதே!…

Ravi Mohan: கோலிவுட்டில் முக்கியமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இப்போது ரவி மோகனாக மாறியிருக்கிறார். இவரின் படங்கள் ஓரளவுக்கு வசூலை கொடுப்பதுண்டு. விஜய், அஜித், ரஜினி போல பல கோடிகளை வசூல் செய்வதில்லை என்றாலும் ரவியை வைத்து படம் தயாரித்தால் தயாரிப்பாளருக்கு லாபம் என்கிற நிலை இருக்கிறது.

தற்போது கராத்தே பாபு, ஜெனீ, பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். சினிமாவில் நடிக்க துவங்கியபோது அண்ணன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்த வந்த ரவி ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

கடந்த சில வருடங்களாக அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. அதில் பொன்னியின் செல்வன் மட்டுமே அவருக்கு ஹிட் அடித்தது. ஒருபக்கம், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்தார். அதோடு, பாடகி கென்னிஷா என்பவரோடும் நெருக்கமாக இருக்கிறார். மும்பையில் தனி அலுவலகம் துவங்கியுள்ள ரவி தற்போது ரவி மோகன் புரடெக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் துவங்கிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் கென்னிஷாவோடு இலங்கை சென்ற ரவி அங்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்ட விஜித் ஹெராஜ் ‘ரவியும், கென்னிஷாவும் இலங்கையில் படங்கள் தயாரிப்பது பற்றியும், இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றியும் என்னை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என பதிவிட்டிருக்கிறார்.

இலங்கையில் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குபின் இலங்கையை சேர்ந்தவர்களோடு தமிழ் சினிமா நடிகர்கள் கூட்டணி போட்டாலே அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்புவதுண்டு. இலங்கையை சேர்ந்த லைக்கா நிறுவனம் முதன் முதலாக விஜயை வைத்து கத்தி படத்தை எடுத்தபோது எதிர்ப்பு வந்தது. அதேபோல், இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானபோதும் எதிர்ப்பு வந்தது. எனவே, அந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகும் நிலை ஏற்பட்டது.

தற்போது ரவி மோகன் இலங்கை அரசுடன் இணைந்து படங்களை தயாரிப்பு மற்றும் இசைக்கச்சேரிகளை நடத்துவது பற்றி பேசியிருப்பதும் எதிர்ப்பை பெற்று வருகிறது. ரவி மோகன் இதை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Published by
சிவா