பாலாவின் அடுத்த ஹீரோ இவர்தானாம்!.. பெரிய இடத்த வளைச்சிப் போட்டாரே!...

bala
Director Bala: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் பாலா. பாலுமகேந்திராவின் சீடர்களில் இவரும் ஒருவர். இவர் இயக்கிய முதல் திரைப்படம் சேது. ஒரு நல்ல வாய்ப்புக்காகவும், வெற்றிக்காகவும் காத்திருந்த விக்ரம் இந்த பட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் இசையில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின்னர்தான் விக்ரம் சியான் விக்ரமாக மாறினார்.
சேது இப்படத்தின் இறுதிக்காட்சி பலரையும் பாதித்தது. பொதுவாக ஒரு படம் வெளியானால் அந்த நடிகருக்கு ரசிகர்கள் உருவாகுவார்கள். ஆனால், சேது படத்தை பார்த்தவர்கள் பாலாவின் ரசிகர்களாக மாறினார்கள். சேது படத்தை பார்த்துவிட்டு சூர்யா பாலாவை தேடிச்சென்று ‘என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள்’ என கேட்டார். அப்படி சூர்யா வைத்து பாலா இயக்கிய படம்தான் நந்தா.
அதன்பின் விக்ரம், சூர்யாவை வைத்து பிதாமகன், ஆர்யாவை வைத்து நான் கடவுள், அதர்வாவை வைத்து பரதேசி, விஷால் ஆர்யாவை வைத்து அவன் இவன், ஜிவி பிரகாஷை வைத்து நாச்சியார், சசிக்குமாரை வைத்து தாரைதப்பட்டை, அருண் விஜயை வைத்து வணங்கான் போன்ற சில படங்களை இயக்கினார். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப்போனால் அந்த நடிகரை பெண்டு கழட்டிவிடுவார். அவருக்கு தேவையானது வரும் வரை விடமாட்டார்.

ஒரே காட்சியை பல முறை எடுப்பார். எனவே, பாலாவின் இயக்கத்தில் நடிக்க வரும் நடிகர்கள் ‘எப்படா ஷூட்டிங் முடியும்?’ என வெறிகொண்டு காத்திருப்பார்கள். இந்நிலையில், பாலா அடுத்து இயக்கும் படத்தில் ஒரு அறிமுக நடிகர் நடிக்கவுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது.
தமிழகமெங்கும் உள்ள தொழில் நிறுவனங்களில் முக்கியமானது டிவிஎஸ் குரூப். மோட்டார் துறையில் பிரபலமானது இந்த நிறுவனம். இந்த டிவிஎஸ் குடும்பத்தில் இருந்துதான் ஒரு நடிகரை பாலா அறிமுகம் செய்யவிருக்கிறார். அந்த படத்தை டிவிஎஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறார்கள். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.