ரத்தம் கொதிக்கிறது.. எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு!.. அஜித் விஷயத்தில் பொங்கிய ராஜ்கிரண்!...

Rajkiran: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவர் தனது காரில் இருந்த நகையை திருடிவிட்டதாக மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்பவர் கொடுத்த புகாரில் தனிப்படை போலீசார் அஜித்தை அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் 44 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது.
இந்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துவக்கத்தில் அமைதி காத்த அரசு இந்த செய்தி தமிழகங்கும் பரவி விட்டதால் அஜித்தை தாக்கிய 5 போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த 5 பேருக்கும் உத்தரவிட்ட மாவட்ட எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சாத்தான் குளத்தில் அப்பா, மகன் என இருவரை போலீசார் அடித்தே கொன்ற சம்பவத்திற்கு சற்றும் குறையாமல் இந்த சம்பவமும் நடந்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பேசினார்கள். போலீசாரின் கடுமையான செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

விஷயம் பூதாகரம் ஆகிவிடவே தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. அதன்பின் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் முதல்வர். அதோடு, அஜித்தின் அம்மா மற்றும் சகோதரனிடம் செல்போனில் பேசிய ஸ்டாலின் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார். அஜித்தின் குடும்பத்திற்கு 5 லட்சம், அவரின் சகோதரனுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டது.
நிகிதாவும், அவரின் அம்மாவும் கோலிலுக்கு சென்றிருந்த போது தள்ளுவண்டியில் நிகிதாவின் அம்மாவை தள்ளிக்கொண்டு கூட்டி வந்ததில் அஜித் 500 ரூபாய் கேட்க நிகிதா 100 மட்டுமே கொடுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அதில் கோபமடைந்த நிகிதா தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒரு ஐஏஸ் அதிகாரியிடம் சொல்லி அஜித்தை கவனிக்க சொல்ல, அஜித் மீது நகை புகார் சொல்லப்பட்டு அவரை போலீசார் அடித்து கொன்றதாக அந்த ஊர் மக்களும், அஜித்தின் நண்பர்களும் சொல்கிறார்கள். நிகிதாவிடம் இதுவரை போலீசார் விசாரணை செய்யவில்லை. மேலிடத்து ஆதரவே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் திரையுலகிலிருந்து பல நடிகர்களும் இதை கண்டிப்பார்கள். சாத்தான்குளம் சம்பவத்தின் போது எல்லோரும் பேசினார்கள். ஆனால், அஜித் மரணம் தொடர்பாக திரையுலகில் பிரபல நடிகர், நடிகைகள் யாரும் பேசவில்லை. திமுக தொடர்பான முக்கிய நபர்கள் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பதால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என அவர்கள் நினைப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். தம்பி அஜித்குமாரை போலீஸ் அதிகாரிகள் அடித்தே கொன்ற கொடுங்கொலையை நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறது. ரத்தம் கொதிக்கிறது.. இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த நிகிதா என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்ததாக, இதுவரை எந்த செய்தியும் வெளிவரவில்லை. என்ன நடக்கிறது?.
ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம்.. அதிகார வர்க்கத்திர்க்கு வேண்டியவர் என்றால் பம்முமா?.. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ராஜ்கிரணின் பதிவை பகிர்ந்து திரையுலகில் முதல் ஆண் மகன் என புளூசட்ட மாறன் பதிவிட்டிருக்கிறார்.