மீண்டும் இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா!. புது பட அறிவிப்பு!.. லட்டு நடிகையை தூக்கிட்டாரே!...

SJ Suriya Killer: வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்தார். அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இதுதான் கதை என முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தை துவங்கிய ஒரே இயக்குனர் இவர்தான். அப்படி சொல்லியும் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
2 படங்களும் ஹிட் என்பதால் அடுத்து இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை தயாரித்து, இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். ஆனால், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். அது அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது. மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். தொடர் வில்லன் வந்தாலும் அவ்வப்போது மான்ஸ்டர் போன்ற நல்ல படங்களிலும் நடித்தார். மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களின் வெற்றி எஸ்.ஜே.சூர்யாவை கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது.
இப்போது பிஸியான நடிகராகிவிட்டார். விக்ரமின் வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. எம்.ஆர்.ராதா போல நடிக்கிறார் என ரஜினியே பாராட்டினார். எஸ்.ஜே.சூர்யாவை நடிகராக ரசிகர்கள் ரசித்தாலும் எப்போது இவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த கேள்வி பல வருடங்களாக அவரிடம் கேட்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கில்லர் என்கிற படத்தின் கதையை எழுதி வைத்திருக்கிறேன். அதை நானே இயக்கி நடிக்க திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எஸ்.ஜே.சூர்யா சொல்லியிருந்தார். இந்நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும், அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இவர் கவின் நடித்துள்ள கிஸ் என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.