அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன்!.. விஜய் தேவரகொண்டாவுக்கு இவ்வளவு வெறியா?...

சிறு வயது முதலே இசையில் ஆர்வமாக இருந்தவர் அனிருத். பள்ளியில் படிக்கும்போதே இசையை கற்றுக்கொள்ள துவங்கினார். ஒரு இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதே இவரின் எண்ணமாக இருந்தது. தனுஷ் இவரின் உறவினர் என்பதால் இருவரும் ஜாலியாக மெட்டுக்களை உருவாக்கி ஆல்பமாக போட முடிவெடுத்தனர். அப்படி அவர்கள் உருவாக்கிய ஒரு பாடல்தான் ஒய் திஸ் கொலவெறி பாடல்.
இந்த பாடல் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர். எனவே, அனிருத் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்த 3 படத்தில் இந்த பாடல் வைக்கப்பட்டு தனுஷ் நடனமாடினார். அதன்பின் அனிருத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தார்.
இதில், வேலை இல்லா பட்டதாரி, மாரி போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களிலும் அனிருத் அட்டகாசமான இசையை கொடுத்திருந்தார். ரஜினிக்கு பேட்ட, ஜெயிலர் போன்ற படங்களிலும், கமலுக்கு விக்ரம், விஜய்க்கு மாஸ்டர், லியோ போன்ற படங்களிலும் அனிருத் போட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படங்கள் அனிருத்தை நம்பர் ஒன் இசையமைப்பாளராக மாற்றிவிட்டது. இப்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இவர்தான். தமிழ் மட்டுமில்லாமல் அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திலும் அனிருத் இசையமைத்தார். அந்த படம் 1300 கோடி வசூல் செய்தது.
இப்போது பல தெலுங்கு பட நடிகர்களும் தங்களின் படங்களில் அனிருத் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்போது விஜய தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய தேவரகொண்டா அனிருத் பற்றி பேசினார்.
வேலை இல்லா பட்டதாரி, 3 போன்ற படங்களின் பாடல்களை கேட்டு யார் இந்த ஜீனியஸ்? இவர் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என நினைத்தேன். நான் சினிமாவில் நடிக்கும்போது என் படத்தில் அனிருத்தின் பாடல்கள் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அது நடக்கவில்லை. அனிருத்தை எப்படி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்பதும் தெரியவில்லை. மேலும், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரின் விருப்பம் வேறாக இருக்கும். படத்தின் பட்ஜெட்டும் முக்கிய காரணமாக இருக்கும்.
அப்போதெல்லாம் ஆதங்கப்படுவேன். நான் மட்டும் ராஜாவாக இருந்தால் அனிருத்தை கடத்தி வந்து என் இடத்தில் வைத்துக்கொண்டு என்னுடைய எல்லா படங்களுக்கும் அவர்தான் இசையமைக்க வேண்டும் என கட்டளை போட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். இப்போது கிங்டம் படத்தில் அனிருத் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என பகிர்ந்துகொண்டார்.