தமிழ் சினிமாவில் இந்த செண்டிமெண்ட் ஒரு டிரேட் மார்க்....எத்தனை படங்கள்!....
தமிழ்சினிமாவில் அண்ணன்-தங்கை சென்டிமண்ட் படங்கள் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கும். அந்தக்காலத்தில் வந்த பாசமலர், என் தங்கை கல்யாணி, திருப்பாச்சி, அண்ணாத்த என சொல்லிக்கொண்டே போகலாம்.
சிவாஜி நடித்த பாசமலர் படத்தை இப்போது வரை யாராலும் மறக்க முடியாது. அந்தப்படத்தை யார் பார்த்தாலும் கண்களில் நீர் கசிந்து வந்து விடும். அவ்வளவு பாசத்தையும் கொட்டியிருப்பார்கள்.
பாசமலர் போல் இனி ஒரு அண்ணன் தங்கை பாசத்தை படமாக எடுக்க முடியாது என்றே சொல்லலாம். மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே என்ற பாடல் இன்றும் நம்மை அறியாமல் தங்கைப் பாசத்தை ஊட்டுகிறது.
சிவாஜியின் தங்கையாக சாவித்ரி நடிப்பில் அவருக்கு இணையாக நடித்து அசத்தியிருப்பார். அதே போல் எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் தங்கை கேரக்டரில் கால் ஊனமுற்றவராக வரும் நடிகை சாரதா பிரமாதமாக நடித்து அசத்தியிருப்பார்.
தங்கைக்காக எம்ஜிஆர் பாடும் பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்தும் பாடலை இப்போது கேட்டாலும் நமக்குள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தும்.
பைரவி படத்தில் தங்கையை வைத்துத் தான் கதையே நகர்கிறது. மூக்கையாவாக ரஜினிகாந்த் நடித்து அசத்தியிருந்தார். அவரது தங்கையாக கீதா நடித்திருந்தார். நான் சிகப்பு மனிதன் படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையைக் கெடுத்தவனை பழி வாங்குவது தான் கதை.
அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் தங்கைக்காக காட்டும் பாசம் இந்தக்காலத்து இளைஞர்களையும் சென்டிமென்ட் என்ற வட்டத்திற்குள் சிக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு படத்தில் ஒரு உயிர் இருந்தது. தங்கையின் பாசத்தில் அவர் பாடும் தங்கமே தங்கம் பாடல் நமக்குள் ஒரு இனம்புரியாத பாசத்தை ஊட்டி வளர்க்கிறது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் அருமையாக நடித்திருப்பார்.
சூப்பர்ஸ்டார் பழி வாங்குவது வேற லெவலில் இருக்கும். சின்னத்தம்பி, கிழக்குச்சீமையிலே, சமுத்திரம், திருப்பாச்சி, திருப்பதி என படங்கள் வரிசை கட்டி வந்தன. என்ன தான் இருந்தாலும் நம்ம டி.ராஜேந்தர் அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பில் உருவான படங்கள் என்றால் அதற்கு தனி மவுசு தான். என் தங்கை கல்யாணி படத்தில் தங்கையிடம் இவர் பேசும் டயலாக்குகள் இன்றும் மேடைகளில் மிமிக்ரி செய்யப்படுகிறது.
தங்கைக்கோர் கீதம், வீராசாமி என அவர் தங்கைப் பாசத்தைப் பல படங்களில் பிழிந்து தந்திருக்கிறார். இவற்றில் தங்கைக்கோர் கீதம் படத்தில் டி.ராஜேந்தரின் தங்கையாக நளினி நடித்திருந்தார். இருவரும் வசனங்களில் பாசத்தைப் பொழிந்து இருப்பார்கள். தாய்மார்களை அதிகம் உச் கொட்ட வைத்த படம் இது.
என்னதான் படங்களில் அண்ணன் தங்கை பாசம் இருந்தாலும் நிஜத்தில் இப்படி இருப்பார்களா என்றால் இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று தான் சொல்லத் தோணுகிறது. பெரும்பாலான வீடுகளில் அண்ணன் தங்கைகள் அதிகம் பேசுவதே கிடையாது. அந்த வகையில் சினிமா ரொம்பவே ஓவர் தான். இப்படி சொன்னாலாவது நிஜத்தில் இருப்பார்கள் என்று தான் எடுக்கிறார்கள் போலும்.!
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இன்னும் ஒரு 100 படங்கள் எடுத்தாலும் தமிழக ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் அது நம் பாரம்பரியத்தோடு ஒட்டியது. ஓர் உயர்ந்த கலாசாரத்தின் அடையாளம்.