நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் சாதனை

by சிவா |
cauvery
X

நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 1.5 லட்சம் டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுத்து மண் வளம் காப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்புரிந்தவர் நம்மாழ்வார் ஐயா அவர்கள், அவர் நம்மோடு வாழ்ந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல் புரிந்தவர். மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நம்மாழ்வார் அவர்கள் இயற்கை தொடர்பான பணிகளில் மட்டுமல்லாது ஈஷாவின் யோகப் பயிற்சிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈஷாவில் கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகளை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர்.

eesha

நம்மாழ்வார் அவர்களின் பாதையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதில் ஈஷா மண் காப்போம் இயக்கமும், விவசாய நிலங்களில் மரவளர்ப்பு பணியை முன்னெடுப்பதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கமும் பெரியளவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு மரக்கன்று 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

சத்குரு அவர்கள் நம்மாழ்வார் ஐயாவை பற்றி கூறும்போது “பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என பகிர்ந்திருக்கிறார்.

eesha

நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 1.5 லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்து நேற்று ஒரே நாளில் 36 மாவட்டங்களின் 70 இடங்களில் 416 ஏக்கர் விவசாய நிலங்களில் நடப்பட்டது. சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயம் செய்வதன் மூலம் மழை தருவிக்க மரங்கள், மண்வள மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், ஆற்று வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து மரங்கள் நடுவதன் மூலம் நதிகளின் நீர் பிடிப்பு அதிகரித்து நதிகள் மீட்டுறுவாக்கம் பெறும். முக்கியமாக காவேரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அடுத்துவரும் 12 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் 4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 76 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. மரம் சார்ந்த விவசாயம் செய்யும் போது விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கிறது.

eesha

சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வரப்போரங்களில் அல்லது வேலியோரங்களில் மரம் வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலை மதிப்பு மிக்க பல்வேறு டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர்வருமானமும் விவசாயிக்கு கிடைக்கும். மானாவாரி நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா மரம் சார்ந்த விவசாயம் வழங்கிவருகிறது.

eesha

மரவிவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷாவின் மரம் சார்ந்த விவசாயக் குழுவினர் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சிகளில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம். மேலும் குறைந்த விலையில் மரக்கன்றுகளை பெறவும், அவரவர் நிலத்திற்கு ஏற்ற மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து நடுவதற்கான ஆலோசனையைப் பெறவும் காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Next Story