More
Categories: latest news

காந்தி ஜெயந்தி: தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு அசத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக செயல்பட்டு வரும் காவேரி கூக்குரல் இயக்கம் மாபெரும் மரம் நடும் விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளை ஒரு பயிர் விவசாய முறையில் இருந்து தற்சார்பு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாற்றும் பணியையும் செய்து வருகிறது.

Advertising
Advertising

அந்த வகையில், கிராமப்புற மக்களின் நலனில் அதிக அக்கறை காட்டிய மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று தமிழ்நாட்டில் 94 விவசாய நிலங்களில், சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1.59 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்க களப் பணியாளர்களின் ஆலோசனைகளின்படி, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.

காவேரி ஆற்றில் நீர் வரத்து நிலையில்லாமலும் குறைந்தும் வரும் இந்த காலகட்டத்தில் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்கள் நடுவது மிகவும் அவசியமாக உள்ளது. எனவே தமிழக மற்றும் கர்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நட ஈஷா திட்டமிட்டுள்ளது.

இதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுத்து வருகிறது. மரம் சார்ந்த விவசாயம் என்பது பலன் தரக்கூடிய விலைமதிப்பு மிக்க மரங்களை விவசாய நிலங்களின் வேலி மற்றும் வரப்பு ஒரங்களில் வளர்ப்பதாகும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற மரங்கள் இதற்கு உகந்தவை.

மேலும், வாய்ப்புள்ளவர்கள் நிலம் முழுவதும் டிம்பர் மரங்கள் நடவு செய்து இடையில் ஊடுபயிர் மற்றும் மிளகு போன்ற நறுமணப்பயிர்களையும் சாகுபடி செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழம் முழுவதும் உள்ள களப்பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள். மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதுவரை ஈஷா சுமார் 9 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் ஒரு கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 45 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

Published by
சிவா

Recent Posts