“சிவாஜியை விட அதிக சம்பளம் வேண்டும்”… வாய்விட்டு வம்பிழுத்த சந்திரபாபு… பதறிப்போன இயக்குனர்…
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த சந்திரபாபு, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய டாப் நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாது பல திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சிறப்பாக நடனமும் ஆடுவார். இவ்வாறு பல திறமைகளை கொண்ட சந்திரபாபு, சிவாஜி கணேசனை விட அதிக சம்பளம் கேட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1958 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சந்திரபாபு, சரோஜா தேவி, மாலினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சபாஷ் மீனா”. இத்திரைப்படத்தை பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கியிருந்தார்.
“சபாஷ் மீனா” திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு முன்பு, இத்திரைப்படத்தின் கதையை சிவாஜி கணேசனிடம் கூறினார் பந்துலு. அந்த கதையில் சிவாஜி கதாப்பாத்திரத்திற்கு சமமாக இன்னொரு கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் அக்கதாப்பாத்திரத்தில் சந்திரபாபு நடித்தால் பொருத்தமாக இருக்கும் என விரும்பினார்.
ஆதலால் சந்திரபாபுவை ஒப்பந்தம் செய்ய பந்துலுவின் பார்ட்னரும் கதாசிரியருமான பா.நீலகண்டன் அவரை அணுகியபோது அத்திரைப்படத்தின் கதையை அவரிடம் கூறினார். சந்திரபாபுவுக்கு கதை மிகவும் பிடித்துப்போனது. அப்போது நீலகண்டன், சந்திரபாபுவிடம் “உங்களை இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு சிவாஜிதான் காரணம்” என கூறினார்.
அதற்கு சந்திரபாபு நன்றி தெரிவிப்பார் என நினைத்தார் நீலகண்டன். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. அத்திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு சிவாஜிதான் காரணம் என்பதை கேட்டுக்கொண்ட சந்திரபாபு, நீலகண்டனிடம் “சிவாஜி நல்ல நடிகன் மட்டுமல்ல. ஒரு நல்ல ரசிகனும் கூட. அதனால்தான் அந்த கதாப்பாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என உங்களிடம் கூறியிருக்கிறார் சிவாஜி” என கூறினாராம். இதனை கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தார் நீலகண்டன்.
அதனை தொடர்ந்து சந்திரபாபுவிடம் சம்பளம் குறித்து கேட்டார் நீலகண்டன். அதற்கு அவர் “சிவாஜிக்கு என்ன சம்பளம் தருகிறீர்களோ, அதே சம்பளத்தில் ஒரு ரூபாய் அதிகம் போட்டு எனக்கு தாருங்கள்” என கூறினாராம். இதனை கேட்ட பா.நீலகண்டன், இந்த விஷயத்தை நேராக சிவாஜியிடம் வந்து கூறினார்.
“என்னைய விட அதிகம் சம்பளம் கேட்கிறானா. அவனை விட்டுவிட்டு வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று சிவாஜி கூறுவார் என பா.நீலகண்டன் எதிர்பார்த்தாராம். ஆனால் சிவாஜி கணேசன் என்ன கூறினார் தெரியுமா?
“இந்த திரைப்படத்தில் சந்திரபாவின் நடிப்புத்தான் பேசப்படும். ஆதலால் அவன் கேட்ட சம்பளத்தை கொடுத்துவிட்டு அவனை ஒப்பந்தம் செய்யுங்கள்” என கூறினாராம். இதனை கேட்ட பா.நீலகண்டனுக்கு ஆச்சரியமாக இருந்ததாம்.
மேலும் “சபாஷ் மீனா” திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக அப்போதுள்ள புதுமுக நடிகையான மாலினி நடித்தார். ஆனால் சந்திரபாபுவுக்கு ஜோடியாக அப்போது மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி நடித்தாராம். அந்த அளவுக்கு அத்திரைப்படத்தில் சந்திரபாபுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம்.