படப்பிடிப்பில் கோபப்பட்டு காசில்லாமல் ரயிலில் ஏறிய சந்திரபாபு!.. என்ன நடந்துச்சு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் 1950களில் இருந்து பல வருடங்கள் காமெடி நடிகராக கொடிகட்டி பிறந்தவர் சந்திரபாபு. ஒல்லியான தேகம், சிறப்பாக நடனமாடும் திறமை என ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சிறந்த பாடகரும் கூட. இவர் பாடிய பல பாடல்கள் எவர் கிரீன் ஹிட்தான். புத்தியுல்லாம் மனிதரெல்லாம், பிறக்கும்போது அழுகின்றாய், குங்குமப்பூவே கொஞ்சுப்புறாவே, ஒன்னுமே புரியலே உலகத்திலே, பம்பரக்கண்ணாலே, நான் ஒரு முட்டாளுங்க, சிரிப்பு வருது சிரிப்பு வருது, உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
எந்த திரையுலக பின்னணியும் இல்லாமல் சினிமாவில் கஷ்டப்பட்டு நுழைந்தவர் சந்திரபாபு. நல்ல திறமையான நடிகர். அதேநேரம் நிறைய தலைக்கணமும் கொண்டவர். சட்டென கோபப்பட்டு விடுவார். இந்த குணங்களால்தான் திரையுலகில் பெரிய சரிவையும் அவர் சந்தித்தார். ஒருகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் தனது வீடு, வாசலை கூட விற்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
ஒருமுறை கோவையில் ஒரு படப்பிடிப்பில் சந்திரபாபு இருந்த போது அவருக்கு கொடுத்த ஆடை பிடிக்காமல் படப்பிடிப்பு குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு ஒரு ரயிலில் ஏறிவிட்டாராம். ஏறிய பிறகுதான் தெரிந்துள்ளது அவரிடம் பணமே இல்லை என்று. ‘சரி நாம்தான் பெரிய நடிகராயிற்றே..நம்மிடம் யார் டிக்கெட் கேட்பார்கள்?’ என்கிற மிதப்பில் இருந்தாராம்.
ஆனால், அந்த ரயில் வட இந்தியாவிலிருந்து வரும் ரயில் என்பதால் அந்த டிடிஆருக்கு தமிழ் தெரியவில்லை. அவருக்கு சந்திரபாபுவை யாரென்றும் தெரியவில்லை. அவர் சந்திரபாபுவிடம் டிக்கெட் கேட்க ‘நான் தமிழ் சினிமாவில் பெரிய நடிகன்’ என சந்திரபாபு ஏதோதோ சொல்ல அவர் கேட்கவில்லை. உடனே ரயிலை நிறுத்தி சந்திரபாபுவை விழுப்புரம் ஸ்டேஷனில் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து சென்றுவிட்டாராம். அதன்பின் சந்திரபாபுவின் சகோதரர் சென்னையிலிருந்து காரை எடுத்து சென்று அவரை மீட்டு வந்துள்ளார்.
இந்த தகவலை நடிகை குட்டி பத்மினி சமூகவலைத்தளங்களில் தெரிவிதுள்ளார்.