நடிகரிடம் சண்டை போட்டு விஷம் குடித்த சந்திரபாபு!.. வாய்ப்புக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!…
திரையுலகில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் முன்னேறியவர் சந்திரபாபு. நடிப்பு, பாட்டு, நடனம் என அசத்தலான திறமையை கொண்டிருந்தார் சந்திரபாபு. இவர் பாடிய பல பாடல்கள் எப்போதும் எவர்கீரின் ஹிட்தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இவர் படாதபாடு பட்டார். ஒரு நிறுவனம் புதிய படத்தை எடுக்கிறது எனில் அங்கு செல்வார். அங்கு நூற்றுக்கணக்கான பேர் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். வரிசையில் நின்று அவர்களையெல்லாம் தாண்டி இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பார்ப்பதே அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.
ஒருமுறை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனரும், இயக்குனருமான எஸ்.எஸ்.வாசன் ஒரு புதிய படத்தை இயக்கவிருந்தார். எனவே, அந்த படத்தில் எப்படியாவது ஒரு வேடத்தை வாங்கிவிட வேண்டும் என நினைத்து சந்திரபாபு அங்கு சென்றார். அப்போது நடிகர் ஜெமினி கணேசன் அங்கு மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். அவர்தான் ஆட்களை தேர்ந்தெடுத்து இயக்குனரை பார்க்க உள்ளே அனுப்புவார்.
சந்திரபாபு முறை வந்தபோது ‘எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் இயக்குனர் யாரையும் பார்க்க மாட்டார். நீ செல்லலாம்’ என ஜெமினி கணேசன் சொல்ல சந்திரபாபு ஏமாற்றமும், கோபமும் அடைந்தார். என்னை உள்ளே செல்ல நீங்கள் அனுமதிக்கவில்லையெனில் இங்கேயே விஷம் குடிப்பேன் என சொல்ல, கோபமான ஜெமினி ‘என்னப்பா மிரட்டுறியா?.. நீ இங்கிருந்து கிளம்பு’ என சொல்ல, மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து அங்கேயே குடித்துவிட்டார் சந்திரபாபு. உடனே பதறிப்போன ஜெமினி கணேசன் அவரை மருத்துவமனையில் சேர்த்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் அங்கேயே உயிரை விடுவோம் என ஏற்கனவே முடிவெடுத்திருந்தார் சந்திரபாபு.
இதைக்கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன் ‘அவனுக்கு உடல் நிலை சரியானதும் என்னை வந்து பார்க்க சொல்’ என சொல்ல அதன்பின் சந்திரபாபுவுக்கு அவர் இயக்கிய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சந்திரபாபுவின் நடிப்பு அவருக்கு பிடித்துப்போக, தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் ஜெமினி கணேசன் படங்களிலும் சந்திரபாபு நடித்தார். அப்போதெல்லாம் ‘டேய் மாப்ள.. என்னை வேணாம்னு சொன்ன இல்ல.. இப்ப பாத்தியா’ என அவரை கலாய்த்துகொண்டே இருப்பாராம் சந்திரபாபு.
இதில் உபரி தகவல் என்னவெனில், அப்போது எஸ்.எஸ்.வாசன் அலுவகத்தில் வாய்ப்பு கேட்டு நின்ற பலரில் சிவாஜி கணேசனும் ஒருவர். சந்திரபாபு விஷம் குடித்த சம்பவத்தை கூட அவர் பார்த்துள்ளார். இந்த தகவலை நடிகை குட்டி பத்மினி முகநூலில் பகிர்ந்துள்ளார்.