“அந்த பாம்புக்காக தான் சந்திரமுகி 2 படமே”… சீக்ரெட்டை உடைத்த பி வாசு
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் மெகா ஹிட் ஆன திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தை பி வாசு இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் ஒரு தனித்துவமான ஹாரர் திரைப்படமாக “சந்திரமுகி” அமைந்தது.
இதில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, தனது கண்களாலேயே பார்வையாளர்களை பயமுறுத்தினார். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ரா ரா” பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடியை நாம் மறந்திருக்கமுடியாது. இப்போதும் இத்திரைப்படத்தின் காமெடி காட்சிகள் மிகப்பிரபலம். “மாப்பு, வச்சிட்டாண்டா ஆப்பு” என்ற காமெடி வசனம் இன்றளவும் பல மீம்களில் பயன்படுத்தப்படுகிறது.
“சந்திரமுகி” திரைப்படத்தில் 30 அடி நீளத்திற்கு ஒரு பாம்பை அடிக்கடி காட்டுவார்கள். அந்த பாம்பு 30 வருடமாக அங்கே இருப்பதாக அத்திரைப்படத்தில் கூறுவார்கள். அத்திரைப்படத்தின் இறுதி காட்சியில் அந்த பாம்பு அந்த அரண்மனையை விட்டு வெளியே போய்விடும். ரசிகர்களுக்கு அந்த பாம்பு குறித்து பல கேள்விகள் எழுந்தன. அந்த பாம்பு ஏன் அங்கு இருக்கிறது? ஏன் கடைசியில் அரண்மனையை விட்டு வெளியே போய்விட்டது? என இப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தையும் பி.வாசுதான் இயக்கிவருகிறார்.
இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு கலந்துகொண்டார் பி வாசு, அதில் “புதையல் எங்கெங்கு எல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் பாம்பும் இருக்கும். அது ஒரு ஐதீகம். சந்திரமுகி திரைப்படத்தில் பாம்பு ஏன் வெளியே போயிற்று? எங்கே போயிற்று? என்றெல்லாம் பலர் கேட்டனர். அந்த பாம்பு ஜோதிகா குணமானப்பின் அந்த அரண்மனையை விட்டு வெளியே போய்விடும். அந்த பாம்பு ஏன் போனது? எங்கே போனது? அந்த பாம்பு மறுபடியும் வருமா? போன்ற விஷயங்கள் எல்லாம் இரண்டாம் பாகத்தை பார்த்தால் தெரிந்துவிடும்” என கூறியுள்ளார். இதன் மூலம் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் அந்த பாம்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என தெரியவருகிறது.