Cinema History
என்னது… இது எல்லாமே ஒரே ஆளா?? சிவாஜி படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன வெளிநாட்டினர்…
நடிகர் திலகம் என்று புகழப்படும் சிவாஜி கணேசன் நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். தான் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்குமிடைய பல வித்தியாசங்களை வெளிப்படுத்தியவர் சிவாஜி கணேசன். இவ்வாறு சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை.
இந்த நிலையில் சிவாஜி கணேசனை பார்த்து ஸ்தம்பித்த பிரெஞ்சு விருது குழுவினரை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரெஞ்ச் அரசு தனது நாட்டின் உயரிய பட்டமான செவாலியர் பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தியது.
இந்த விருதை வழங்குவதற்கு முன் செவாலியர் விருது குழுவினருக்கு சிவாஜி கணேசன் நடித்த “நவராத்திரி” திரைப்படத்தை திரையிட்டு காட்டினார்களாம். அத்திரைப்படத்தை முழுவதுமாக பார்த்து முடித்த விருது குழுவினர் “படம் நல்லா இருக்கு. 9 பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா இதுல அப்படி என்ன விசேஷம் இருக்கு” என கேட்டார்களாம்.
அதற்கு படத்தை திரையிட்டுக்காட்டியவர்கள் “இந்த 9 கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர் ஒரே நடிகர்தான்” என கூறினார்கள். இதனை கேட்டு விருது குழுவினர் அதிர்ச்சியடைந்தனராம் “என்ன சொல்றீங்க. 9 பேரும் ஒரே ஆளா?” என வியப்புடன் கேட்டுவிட்டு “நவராத்திரி” திரைப்படத்தை மீண்டும் திரையிட்டுக்காட்டச் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த படத்தை மீண்டும் பார்த்த விருது குழுவினர் “என்ன? இந்த எல்லா கதாப்பாத்திரத்திலும் நடித்தது ஒரே ஆளா? நம்பவே முடியவில்லையே!” என அசந்துப்போனார்களாம்.
“ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார். எப்படி இவரால் இப்படி நடிக்க முடிந்தது” என அசந்துப்போனார்களாம். அதன் பிறகுதான் இவர் செவாலியர் பட்டத்திற்கு தகுதியானவர் என முடிவுசெய்து சிவாஜி கணேசனுக்கு செவாலியர் பட்டம் வழங்கினார்களாம்.
இதையும் படிங்க: டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது?? சிவாஜி படத்துக்கு எழுந்த விசித்திர சிக்கல்… சமயோஜிதமாக சமாளித்த தயாரிப்பாளர்…
1964 ஆம் ஆண்டு வெளியான “நவராத்திரி” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசரவைத்திருந்தார். அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் அபாரமான நடிப்பை இப்போதும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.