பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லி எப்படி மடக்குவது.. இந்த பிரபலம் சொல்லும் ஒன் லைன் சீக்ரெட்டை கேளுங்க!

by Saranya M |
பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லி எப்படி மடக்குவது.. இந்த பிரபலம் சொல்லும் ஒன் லைன் சீக்ரெட்டை கேளுங்க!
X

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பலரும் நல்ல திரைக்கதையை எழுதி வைத்திருந்தாலும், ஹீரோக்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதை சொல்ல செல்லும் முன் ஏற்படும் தயக்கம் மற்றும் அங்கே அவர்கள் சொதப்பும் சொதப்பல் காரணமாக பல இளைஞர்கள் இயக்குநர் ஆக முடியாமலே சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களுக்கு சூப்பராக கதை சொல்லி உடனடியாக பட வாய்ப்புகளை பிடித்து அடுத்தடுத்து சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக வலம் வருகின்றனர்.

ஒரு படத்தின் கதையை எழுதி முடித்து விட்டால் ஹீரோக்களுக்கு அந்த கதையை ஒன்லைனாக முதலில் எப்படி சொல்ல வேண்டும் என்று இயக்குநராக ஆசைப்படுபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எழுத்தாளர் பாலகுமரன் எழுதிய புத்தகத்தில் இருந்த முக்கியமான விஷயங்களை எடுத்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.

இதயம் படம் உருவான கதை

சினிமாவில் கதை சொல்வதே ஒரு தனி கலை. ஒரு படத்தின் கதையை எப்படி ஆரம்பிப்பது, அதற்கு எப்படி இன்டர்வெல் பிளாக் விடுவது, கிளைமேக்ஸ் வரையில் பரபரப்பை கொடுத்து கேட்பவர்களை தூண்ட வைப்பது, ஒன் லைனாக எப்படி சொல்வது என அனைத்தையுமே தெரிந்து வைத்திருக்க வேண்டும் இயக்குநர் கதிர் ஒரு கதையை எழுதி வைத்துக் கொண்டு ரொம்ப நாளா அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என தவித்துக் கொண்டிருந்தார்.

அதன் காரணமாக ஸ்டூடியோ ஒன்றில் டிசைனராகவும் பணியாற்றினார். அந்த நிறுவனத்திலேயே தனது கதையை சொல்ல மறைந்த நடிகர் முரளியை பார்த்து இந்த கதையை சொல்லுங்க என்கின்றனர்.

முரளி எங்கேயோ அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது, கதிர் அவருக்கு கதை சொல்ல போகிறார். எனக்கு நேரமே இல்லை நான் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என முரளி சொல்ல, ஒரே ஒரு நிமிஷம் சார் என சொல்லிவிட்டு ஒரு கிராமத்தில் இருந்து ஒரு இளைஞன் மருத்துவ படிப்பு படிக்க சென்னைக்கு வருகிறான். படிப்பு முடிந்து விட்டு திரும்ப அவன் ஊருக்குப் போகும் போது மருத்துவராக போகாமல் நோயாளியாக போகிறான் என்றதுமே எப்படிப்பா என முரளி கேட்க ஆரம்பித்து விடுகிறார். அப்படி உருவான படம் தான் இதயம். நடிகர் முரளிக்கு மிகப்பெரிய வெற்றியை அந்த படம் தேடித் தந்தது.

வைதேகி காத்திருந்தால் உதயமான கதை

ஊரெல்லாம் தண்ணி வந்து வெள்ளத்தில் மூழ்கி ஒருத்தரின் வாழ்க்கையே பறிபோகிறது. இன்னொரு இடத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் ஒரு உயிர் பரிதாபமாக இறக்கிறது என்று சொல்லி உருவான கதை தான் வைதேகி காத்திருந்தால்.

கமலை வியக்க வைத்த ஷங்கர்

நாடு முழுவதும் ஊழல் பெருகி தலை விரித்து ஆடுகிறது. ஊழல் காரணமாக ஏழை மக்கள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். இதையெல்லாம் பார்த்த ஒரு 80 வயது முதியவர் ஊழலை எதிர்த்து போராட நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஊழல்வாதிகளை அடித்து நொறுக்குகிறார் என ஷங்கர் சொல்லும் போது கமல்ஹாசன் 80 வயசு தாத்தா எப்படி அடிப்பார் என்கிற கேள்வியை எழுப்ப, அவருக்கு வர்ம கலை தெரியும் என அதற்கான காரணத்தையும் சொல்ல உருவான படம் தான் இந்தியன்.

அங்காடித் தெரு எனும் அற்புதம்

ஒரு இயக்குநர் சரியான வயிற்றுப் பசி காரணமாக மேற்கு மாம்பழம் ரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் ஒரு ரோட்டோர டிபன் கடையில் நைட்டு 11 மணிக்கு சாப்பிட செல்கிறார். அப்போது, அங்கே ஒரு ஜவுளிக் கடையில் இருந்து வரிசையாக இளம் பெண்கள் வேலை முடித்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

அதில், ஒரு பெண்ணை அழைத்து ஏன்மா காலையில் 6 மணிக்கு உள்ளே போறீங்க நைட்டு 11 மணிக்கு மேல ஆகுது இப்போ வெளியே வரீங்கன்னு கேட்டதும் அந்த பெண் சொன்ன கதையை கேட்ட இயக்குநருக்கு பசி பறந்து போய் அந்த கதையில் மூழ்குகிறார். அதன் பின்னர் 10 மாதத்திற்கும் மேலாக அந்த ரங்கநாதன் தெருவிலேயே முகாமிட்டு ஒவ்வொரு கடையாக நடக்கும் பிரச்சனைகளும், அங்கே வேலை செய்யும் நபர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் ரத்தமும் சதையுமாக அங்காடித் தெரு என்கிற படமாக இயக்கி மிகப்பெரிய வெற்றிப் பெறுகிறார்.

இப்படித்தான் திரைக்கதையை உருவாக்க வேண்டும். உருவாக்கிய திரைக்கதைக்கு சரியான ஒன் லைனுடன் ஹீரோக்களை அணுகி சரியான நேரத்தில் அவர்களை திகைப்பில் ஆழ்த்தும்படியும் அவர்களை வியக்க வைக்கும்படியும் கதை சொல்லி விட்டால் உங்கள் கதை அவர்களுக்கு நிச்சயம் பிடித்து படம் பண்ணும் வாய்ப்பை பெற்று விடுவீர்கள் என தனது வீடியோவில் செய்யாறு பாலு பல உதாரணங்களுடன் கதை சொல்வது எப்படி என்கிற வகுப்பை எடுத்திருக்கிறார்.

Next Story