தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து ஜொலித்தவர்கள் யார் யார்?
தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகளாக மாறியவர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலர் குழந்தை நட்சத்திரத்தில் பெயர் வாங்கிய அளவு வளர்ந்ததும் வாய்ப்பு கிடைக்காமல் போனதுமுண்டு. அவர்களில் ஒருசிலரைப் பார்ப்போம்.
கமல்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் கமல். தனக்கான கதாபாத்திரங்களை புதுசு புதுசாக ஒரு பரிசோதனை முயற்சியாகவே செய்து காட்டுவார்.
குழந்தையாக தான் நடித்த முதல் படத்திலேயே ஜனாதிபதி கையால் விருது வாங்கினார். அந்தப்படம் தான் களத்தூர் கண்ணம்மா. அப்போது அவரது வயது 4. தற்போதும் இவர் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார்.
ஸ்ரீதேவி
இவரும் தனது 4வது வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார். துணைவன் படத்தில் இவர் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் இந்தியிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
வளர்ந்த பின்பும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்தார். இவரது படங்கள் அனைத்தும் ஹிட்டாயின. வளர்ந்ததும் இவர் முன்னணி கதாநாயகியாக நடித்த முதல் படம் 1976ல் வெளியான மூன்று முடிச்சு. இதில் கமலுடன், ரஜினியும் நடித்துள்ளார்.
பேபி ஷாலினி
குழந்தைநட்சத்திரமாக இவர் காலூன்றியது முதலில் மலையாளப்படத்தில் தான். என்டே மமாட்டிகுட்டியம்மாக்கு என்ற படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 4. தொடர்ந்து ஜகடேகா வீருடு அடிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
அப்போது அவரது தங்கை ஷாமிலியும் உடன் நடித்தார். சிரஞ்சீவி எடுத்து வளர்க்கும் அனாதை குழந்தையாக ஷாமிலி வருவார். வளர்;ந்ததும் ஷாலினி ஹீரோயினாக நடித்த முதல் படம் காதலுக்கு மரியாதை.
அஜீத்குமார்
தல அஜீத்தும், அவரது மனைவி பேபி ஷாலினியும் குழந்தை நட்சத்திரங்கள் தான். என்ன தல எப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆம்.
சுரேஷ், நதியா நடித்த என் வீடு என் கணவர் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக வருவார். தொடர்ந்து வளர்ந்ததும் இவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் அமராவதி. இப்போதும் படுபிசியான முன்னணி ஹீரோ அஜீத்குமார் தான்.
குட்டி பத்மினி
தனது 3வது வயதிலேயே தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார். குழந்தையும் தெய்வமும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்தார். இதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரம் இவர் தான்.
இவர் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். வளர்ந்ததும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு இல்லை. துணைநாயகியாக பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.