எம்.ஜி.ஆர் வீட்டில் அடுப்பு எரிய உதவிய சின்னப்பா தேவர்… திரையுலகமே போற்றிய நட்பின் தொடக்கம் இதுதான்…
சாண்டோ சின்னப்பா தேவரும் எம்.ஜி.ஆரும் மிக நெருங்கிய நண்பர்கள். எம்.ஜி.ஆரை வைத்து சின்னப்பா தேவர், கிட்டத்தட்ட 16 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர்களின் நட்பு தொடங்கிய இடம் என்பது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்று. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் அது.
எம்.ஜி.ஆர் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே உடற்பயிற்சி நிலையம் வைத்திருந்தார் சின்னப்பா தேவர். அந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் போவது வழக்கம். இவ்வாறுதான் அவர்கள் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர. குடியிருந்த வீட்டு பக்கமாக சென்றுகொண்டிருந்தார் சின்னப்பா தேவர். அப்போது எம்.ஜி.ஆரின் தாயாரான சத்யபாமா மிகவும் பதற்றமாக காணப்பட்டார். அவரை பார்த்த சின்னப்பா தேவர் அவரின் பதற்றத்தை குறித்து விசாரித்தார்.
இதையும் படிங்க: “எம்.ஜி.ஆர் செத்துப்போனா எப்படி படம் ஓடும்?”… புதுசா எடுக்குறேன்னு வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்…
அதற்கு அவர் “ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) சம்பளம் வாங்கப்போனான். இன்னும் ஆளை காணோம். அவன் வாங்கி வந்த பின்னால்தான் சமையலையே தொடங்க வேண்டும்” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட சின்னப்பா தேவர் உடனே தனது வீட்டிற்குச் சென்று ஒரு பை நிறைய அரிசியும் பருப்பும் எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்.
சில மணி நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வீடு திரும்பியபோது தனது தாயார் சமைத்துக்கொண்டிருந்ததை பார்த்தார். சின்னப்பா தேவர்தான் சாப்பாட்டுக்கான பொருட்களை கொடுத்தார் என்பதை எம்.ஜி.ஆரிடம் கூறினார் சத்யபாமா. அதை கேட்ட எம்.ஜி.ஆர் மிகவும் நெகிழ்ந்து போனார். இந்த சம்பவத்தில் இருந்துதான் அவர்கள் இருவரும் சினிமாத்துறையே வியந்து பார்க்கும் அளவுக்கு நட்பானார்களாம்.