ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த எம்.ஜி.ஆர்… உதவியாளரை பளார் என்று அறைந்த தயாரிப்பாளர்… அடப்பாவமே!!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் சாண்ட்டோ சின்னப்பா தேவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரை வைத்து கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
சாண்டோ சின்னப்பா தேவரை பொறுத்தவரை படப்பிடிப்பிற்கு யார் தாமதமாக வந்தாலும் கோபம் தலைக்கேறிவிடும். முகத்திற்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவே அந்த கோபத்தை வெளிப்படுத்திவிடுவார். ஆனால் அவர் தன்னைத்தான் திட்டுகிறார் என்ற விஷயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிவது போலவே திட்டுவார். இது போன்ற ஒரு சம்பவம் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பிலும் நடந்தது.
1964 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வேட்டைக்காரன்”. இத்திரைப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கியிருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் படப்பிடிப்பின்போது ஒரு நாள் எம்.ஜி.ஆர் மிகவும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்தாராம். அப்போது சின்னப்பா தேவர் அவரது அருகே நின்றிருந்த தேநீர் கொடுக்கும் பையனின் கன்னத்தில் அறைந்தாராம். “எவ்வளவு நேரம் ஆச்சு டீ கேட்டு, இவ்வளவு லேட்டா கொண்டு வர்ர” என திட்டிவிட்டு மீண்டும் அடித்தாராம்.
அப்போது அவர் பக்கத்தில் வந்து நின்ற எம்.ஜி.ஆர், “அவனை அடிக்காதீங்க, நான்தான் லேட்டு. என்னைய பார்க்குறதுக்கு சிலோன்ல இருந்து சில பேர் வீட்டுக்கு வந்துட்டாங்க. அதனால் கொஞ்சம் தாமதமாகிடுச்சு” என்றாராம்.
அதற்கு சின்னப்பா தேவர் “முருகா, நீங்க எப்போ வந்தீங்க? உங்களை பத்தி பேசுவேனா? அந்த பையன் டீ கொடுக்க லேட்டு அதனால்தான் பேசினேன்” என்று கூறினாராம் சின்னப்பா தேவர். ஆனால் அவர் அப்படி கூறினாலும் அவர் தன்னைத்தான் திட்டினார் என எம்.ஜி.ஆருக்கு நன்றாக தெரியுமாம். இது போல் பல முறை நடந்துள்ளதாம். ஆனாலும் எம்.ஜி.ஆர் சின்னப்பா தேவருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். அந்த அளவுக்கு அவர்களது நட்பு இருந்தது.