படப்பிடிப்பில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த பானுமதி… நடிகரிடம் வத்திவைத்த நபர்… ஆனால் நடந்ததோ வேறு!!
தமிழின் பழம்பெரும் நடிகையாக விளங்கியவர் பானுமதி. 1939 ஆம் ஆண்டு திரையுலகில் கால் எடுத்து வைத்த பானுமதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பத்ம பூசன், பத்மஸ்ரீ போன்ற பல கௌரவ விருதுகளை பெற்றவர் பானுமதி. நடிப்பு மட்டுமல்லாத இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல துறைகளிலும் ஜொலித்தவர் பானுமதி.
இந்த நிலையில் பானுமதி “நல்ல தம்பி” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவத்தை குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சமீபத்திய வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
1949 ஆம் ஆண்டு என்.எஸ்.கிருஷ்ணன், பி.பானுமதி, டி.மதுரம் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நல்ல தம்பி”. இத்திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கினர். சி.என்.அண்ணாதுரை இத்திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதினார்.
இத்திரைப்படம் உருவானபோது ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்தில் பானுமதி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாராம். இதனை பார்த்த ஒரு நபர், அத்திரைப்படத்தின் ஹீரோவான என்.எஸ்.கிருஷ்ணனிடம் சென்று, “என்ன சார், இந்த பெண் மரியாதையே இல்லாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்” என புகார் அளித்தாராம்.
அதற்கு பதிலளித்த என்.எஸ்.கிருஷ்ணன் “உனது கால் மேலயா அவர் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்? அவர் கால் மேல் அவர் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். இதில் உனக்கு என்ன பிரச்சனை?” என முகத்தில் அடிப்பது போல் கூறினாராம். இதை கேட்ட நபர் வாயடைத்து போய்விட்டாராம். அந்த காலத்திலேயே இது போன்ற முற்போக்கு சிந்தனையை கொண்ட நடிகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது.