இளையராஜா சொன்ன ஒரு வார்த்தை.. பரிட்சைக்கு போகாம பாடின பாட்டு!.. சர்ப்பரைஸ் பகிர்ந்த பாடகி சித்ரா…
தமிழ் திரை இசையுலகில் சின்னக்குயில் சித்ரா என எல்லோராலும் அழைக்கப்படுபவர் பாடகி சித்ரா. கேரளாவை சேர்ந்த சித்ரா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே சினிமாவில் பாடவந்துவிட்டார். பூவே பூச்சூடவா படத்தில் சித்ரா பாடிய சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க சின்னக்குயில் சித்ராவாக மாறிப்போனார். புன்னகை மன்னன் படத்தில் இவர் பாடிய ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ பாடல் மனதை உருக்கியது.
இளையராஜாவின் இசையில் பல நூறு மனதை மயக்கும் பாடல்களை சித்ரா பாடியுள்ளார். 70,80 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் கண்டிப்பாக சித்ரா பாடிய பல பாடல்கள் நிச்சயம் இருக்கும். தற்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து பாடி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம் பெற்ற ‘ ஆராரிராரிரோ கேட்குதம்மா’ அம்மா செண்டிமெண்ட் பாடலை சித்ராவே பாடியிருந்தார்.
இவர் கல்லூரியில் எம்.ஏ படித்துக்கொண்டிருக்கும் போதுதான் தமிழ் சினிமாவில் பாட துவங்கினார். அப்போது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரைவி படத்திற்காக ஒரு பாடலை பாட அப்பாவுடன் சென்னை வந்தார். இளையராஜாவில் இசையில் ‘நான் ஒரு சிந்து காவடி சிந்து’ பாடலை காலையில் பாடி முடித்தார். அந்த பாடலை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராக இருந்த அவரிடம் ‘இன்னொரு பாடலை பாடி தரமுடியுமா?’ என இளையராஜா கேட்டுள்ளார்.
அதற்கு சித்ராவின் அப்பா ‘இல்லை சார்.. நாளைக்கு சித்ராவுக்கு எம்.ஏ. பரிட்சை இருக்கிறது’ என தயங்க, அதற்கு இளையராஜா ‘அதை விட பெருசாக இதில் சித்ரா வருவார்.. என்னை நம்புங்கள்.. அவர் இந்த பாடலை பாடட்டும்’ என்றாராம். அப்படி சித்ரா பாடிய பாடல்தான் அதே சிந்து பைரவி படத்தில் இடம் பெற்ற ‘பாடறியே படிப்பறியே’ பாடல். இந்த பாடல் அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இந்த தகவலை பாடகி சித்ரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.