ரஜினி இப்போது நெல்சன் இயக்கியத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் அவரின் 173 வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர்.சி. அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
எனவே, வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பது உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை தற்போது ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மேலும் இந்த படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த சிபி சக்கரவர்த்தி இந்த படம் 100 கோடி வசூலை பெற்றது. உடனே சிபியை அழைத்து பாராட்டிய ரஜினி வழக்கம்போல் ‘எனக்கு ஏதேனும் லைன் இருக்கிறதா?’ என கேட்க அவருக்காக ஒரு கதையை உருவாக்கினார் சிபி சக்கரவர்த்தி. தீவிர ரஜினி ரசிகரான சிபி ரஜினியை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்கிற ஆசையில் இருந்தார். ஆனால் கதை பிடிக்கவில்லை என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார் ரஜினி.

தற்போது மூன்றரை வருடங்கள் கழித்து தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதால் அந்த வாய்ப்பு சிபிக்கு கிடைத்திருக்கிறது.
டான் படத்திற்கு பின் ரஜினி படம் மிஸ் ஆகி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க முயற்சிகள் செய்து அது நடக்காமல் தெலுங்கு நடிகர் நானிக்கு ஒரு கதை சொல்லி அதுவும் நடக்காமல் தற்போது ரஜினி பட இயக்குனராக மாறியிருக்கிறார். மொத்தத்தில் அப்போது விட்டதை இப்போது பிடித்திருக்கிறார் சிபி சக்கரவர்த்தி
