ரஜினி என்கிட்ட சொன்ன மாதிரி யாருமே சொன்னதில்லை!.. அட இளையராஜாவே பாராட்டிட்டாரே!...

தமிழ் சினிமாவுக்கு இளையராஜாவின் தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது 80 கால கட்டத்தில் எல்லோருக்கும் தெரியும். 80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. அவரும் தனது இசை மற்றும் பின்னணி இசை மூலம் பல படங்களை ஓட வைத்தார்.
அவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பாடியது. நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் இருந்த 80களில் இசையமைப்பாளருக்கென ரசிகர்கள் உருவானது இளையராஜாவுக்குதான். அதோடு, அவர் இசையில் பாடிய எஸ்.பி.பி, சித்ரா, ஜானகி, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்ற பாடகர், பாடகிகளுக்கும் ரசிகர்கள் உருவானார்கள்.
ரஜினி, கமல், மோகன், ராமராஜன், சத்தியராஜ், பிரபு, கார்த்திக் என 80களில் கலக்கிய பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் இளையராஜாவின் இசையைத்தான் நம்பி இருந்தனர். அதனால் இளையராஜாவின் முன் கோபத்தை எல்லோரும் பொறுத்துக்கொண்டனர். ஆனால், 90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற இசையமைப்பாளர்கள் வந்தபின் பல இயக்குனர்களும், நடிகர்களும் இளையராஜாவை கைவிட்டனர்.
அதில் ரஜினியும் ஒருவர். அதற்கு காரணம் பாட்ஷா படத்தில் சம்பள விஷயத்தில் கோபம் ஏற்பட்டு ‘இந்த படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன்’ என சொன்னதோடு மட்டுமில்லாமல் ரஜினியிடம் கோபப்பட்டு பேசினார் இளையராஜா. அதன்பின் ரஜினியின் எந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கவில்லை.
அதேநேரம் எல்லா மேடையிலும் இளையராஜாவை புகழ்ந்தே பேசுவார் ரஜினி. மேலும், இளையராஜா புதிதாக ஸ்டுடியோ கட்டியபோது அங்கு சென்று அதை பார்த்துவிட்டு ராஜாவிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டும் வந்தார் ரஜினி. இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ரஜினி கதை எழுதி தயாரித்த வள்ளி படத்தில் இடம் பெற்ற ‘என்னுள்ளே.. என்னுள்ளே’ பாடல் பாடப்பட்டது. அதன்பின் பேசிய இளையராஜா ‘இந்த பாடலுக்கான சூழ்நிலையை என்னிடம் ரஜினி விவரித்ததே அழகாக இருந்தது. அவ்வளவு பொறுமையாக விளக்கமாக விவரித்து சொன்னார். அவருக்குள் 10 இயக்குனர்கள் இருக்கிறார்கள்’ என ராஜா ரஜினியை பாராட்டி பேசியிருந்தார்.
இளையராஜா அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டி பேசமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.