Cinema History
சிட்டிசன் படத்தில் இந்தியன் தாத்தாவா? அஜித்துக்காக கமல் செய்த சூப்பர் சம்பவம்
அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் சிட்டிசன். சரவண சுப்பையா இயக்கத்தில் 2001-ல் வெளியான இந்தப் படத்தில் அஜித் 9 வேடங்களில் நடித்திருந்தார். கில்லி போன்ற ஒரு சில விஜய் படங்களைத்தான் அஜித் ரசிகர்களும் கொண்டாடுவார்கள். அப்படி, சிட்டிசன் படம் விஜய் ரசிகர்களும் கொண்டாடும் படம்.
இயக்குநர் சரவண சுப்பையா, முதலில் இந்தக் கதையை நடிகர் கமல்ஹாசனிடம்தான் சொன்னாராம். ஹேராம் ஷூட்டில் இருந்த கமல், கதையைக் கேட்டுவிட்டு நிச்சயம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ஹேராம் பட வேலைகள் இருந்ததால் ஆறு மாதம் வரை பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அந்த நேரத்தில் இந்தப் படத்தை இயக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சரவண சுப்பையா, அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டதும் அஜித்துக்கு ரொம்பவே பிடித்துப் போனதாம். உடனடியாகத் தனது நண்பர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியிடம் பேசச் சொல்லியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்துப் போகவே, சிட்டிசன் உருவாகியிருக்கிறது.
படத்துக்காக அஜித் உடல் எடையையும் கொஞ்சம் கூட்டினாராம். படத்தில் 9 வேடங்களில் அஜித் நடித்திருந்தாலும், வயதானவர் கேரக்டர் பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் வெளியானபோது, கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரோடு ஒப்பிட்டு பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அந்தப் படத்தின் கேரக்டர் உருவாக கமல்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என அஜித்தே குறிப்பிட்டிருக்கிறார்.
சிட்டிசன் நேரத்தில் தனது திருமண அழைப்பிதழைக் கொடுக்க கமலை நேரில் சந்தித்தாராம் அஜித். அப்போது, இந்தியன் தாத்தா கேரக்டரைக் குறிப்பிட்டு பாராட்டியதோடு, அதன் மேக்கப் ஆர்டிஸ்ட் குறித்தும் அவரிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, மைக்கேல் வெஸ்ட்மோர் எனும் அந்த அமெரிக்க மேக் அப் ஆர்டிஸ்ட் பற்றி சொன்ன கமல், அவருக்கு டாலர்களில் ஊதியம் அளிக்க வேண்டும் என்று சொன்னதோடு, மும்பையைச் சேர்ந்த அணில் பிரேம்ஜிகர் என்ற மேக் அப் ஆர்டிஸ்ட் பற்றி சொல்லியிருக்கிறார். இப்படி கமல் உதவியோடுதான் சிட்டிசன் படம் உருவாகியிருக்கிறது.