Cinema History
அந்த பாட்டால ஸ்ரேயா கோஷல் நொந்துட்டாங்களாம்… ஓ அதான் இப்படியா?
இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் இருந்த கார்த்தியை நடிகராக திசைதிருப்பி விட்ட படம் அமீரின் பருத்திவீரன். இயக்குநர் அமீர், கார்த்திக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்குமே ரொம்ப முக்கியமான படமாக அமைந்துவிட்ட படம்தான் பருத்திவீரன். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹீரோயின் பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பருத்திவீரன் வாய்ப்பு வந்தபோது தயங்கிய கார்த்தியை நடிக்க வைத்தது அவரது தந்தை சிவக்குமார்தான். 2005-ல் ஷூட் தொடங்கி பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது படம். 2006 பாதியில் கிட்டத்தட்ட படம் கைவிடப்படும் சூழல். அப்போது இயக்குநர் அமீரே படத்தைத் தயாரிக்க முடிவு எடுத்தார்.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த ஷூட்டிங்கில், கிட்டத்தட்ட 60 புதுமுகங்களைப் படம் மூலம் அமீர் அறிமுகப்படுத்தினார். படத்தின் முக்கியமான பலம் யுவனின் இசை. பாடல் வெளியீட்டு விழாவே கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் பருத்தி வீரன் பாடல்களை வெளியிட்டது நடிகர் விஜய்.
மௌனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அமீர் – யுவன் கூட்டணியில் உருவானது பருத்திவீரன் பாடல்கள். குறிப்பாக ஸ்ரேயா கோஷல் பாடிய `அய்யய்யோ’ பாடல் யுவன் ஸ்பெஷலாக இன்றளவும் கொண்டாடப்படும் பாடல். அந்தப் பாடல் பதிவின்போது ஸ்ரேயா கோஷல் அழுதே விட்டாராம்.
டியூன், வரிகள் எல்லாம் ரெடியான பிறகு ஸ்ரேயா கோஷலை பாட அழைத்திருக்கிறார்கள். அவர் வழக்கமான தனது குரலால் மிரட்டவே செய்திருக்கிறார். ஆனாலும் பாடலில் இயக்குநர் அமீருக்குத் திருப்தியே இல்லையாம். ஹீரோயின் முத்தழகு எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாத கேரக்டர். இவ்வளவு அழகாகப் பாடினால் அது ஒத்துவராது என பல கரெக்ஷன்களை சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார் அமீர். ஒரு கட்டத்தில் தனக்குப் பாட வரவில்லையோ என்று அழுதே விட்டாராம் ஸ்ரேயா கோஷல். அதன்பின்னர், அவரைத் தேற்றி ஒரு வழியாக பாடலைப் பதிவு செய்து முடித்திருக்கிறார்கள்.அந்த பாட்டால ஸ்ரேயா கோஷல் நொந்துட்டாங்களாம்… ஓ அதான் இப்படியா?