Cinema History
விடிய விடிய ஷூட்டிங்… அதிகாலை 3 மணிக்கு சென்று மீண்டும் 6 மணிக்கு செட்டுக்குள் வந்த விஜயகாந்த்..
வானத்தைப்போல படம் விஜயகாந்த் – இயக்குநர் விக்ரமன் ஆகியோரின் திரைவாழ்வில் ரொம்ப முக்கியமான படம். பாசமிகு அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை இயல்பாகச் சொல்லி தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த படம்.
படம் ரிலீஸாகி 24 ஆண்டுகள் கடந்திருந்தாலும் வானத்தைப்போல அண்ணன் இவருனு இன்றைக்கும் மீம் கண்டண்டாக சமூக வலைதளங்களில் வலம் வரும் அளவுக்குப் புகழ்பெற்றது. விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், செந்தில், கௌசல்யா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருந்தனர்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் 2000-ம் ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 250 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ராஜசேகர் நடிப்பில் `மா அண்ணையா’ எனவும் கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் யஜமானா எனவும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகளை ஈட்டிய கதை.
தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இயக்குநர் விக்ரமன் கதையைச் சொன்னதும், அவர் கொடுத்த ஐடியாதான் விஜயகாந்தை நடிக்க வைப்பது. ஆரம்பத்தில் விக்ரமன் தயங்கினாலும், பின்னர் விஜயகாந்தை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டு படத்தைத் தொடங்கினார். லிவிங்ஸ்டன் கேரக்டரில் முதலில் நடிக்க நெப்போலியனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், தேதிகள் ஒதுக்க முடியாத சூழலில் அது நடக்காமல் போயிருக்கிறது.
படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் நடத்தப்பட்டது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. குறிப்பாக எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் குடும்பங்கள் கொண்டாடும் பாடலாக மாறிப்போனது. இந்தப் பாடல் ஷூட் நேரத்தில் குடும்பத்தினர் எல்லாரும் இணைந்து அதிகாலை நேரத்தில் கையில் மத்தாப்பு சுற்றுவது போன்ற காட்சியை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால், குறிப்பிட்ட அந்த ஷூட்டின் ஷெட்யூல் அடுத்த நாள் முடிய திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் முதல் நாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், 6 மணிக்கே விஜயகாந்த் வர வேண்டிய நிலை. ஆனால், இதை அவரிடம் சென்று கேட்க படக்குழுவினர் ரொம்பவே யோசித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநர் விக்ரமன் இதைப்பற்றி விஜயகாந்திடம் சொன்னதும், `வந்துடலாம் சார். எத்தனை மணிக்கு வரணும்’ என்று இயல்பாகக் கேட்டிருக்கிறார். அதன்பின், 3 மணி நேரம் மட்டுமே பிரேக் எடுத்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் ஷூட்டுக்கு வந்து சொன்னபடி சரியாக முடித்துக் கொடுத்தாராம் கேப்டன்.