அதெல்லாம் கஷ்டம்... உனக்கு வராது என்ற இயக்குனர்... இரவு முழுக்க பயிற்சி எடுத்து சாதித்த விக்ரம்..!
விக்ரம் தமிழ்சினிமா உலகில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தியவர். இவர் நடித்த படங்களைப் பார்த்தால் என்னடா இவ்ளோ மேக்கப், இப்படி எல்லாம் உடலை வருத்தி நடிக்க வேண்டுமா என்று எண்ணத் தோன்றும். ஆரம்பத்தில் பிக்கப் ஆகாமல் இருந்தாலும் சேது படத்திற்குப் பிறகு தனக்கென ஒரு ரூட்டைக் கண்டுபிடித்து அதில் பயணம் செய்ய ஆரம்பித்தார் விக்ரம்.
அப்புறம் அவர் படம் எல்லாமே ஹிட் தான். ஒரு புறம் யாருமே நடிக்கத் தயங்கும் கேரக்டர்கள். சேது, பிதாமகன், அந்நியன், ஐ, தங்கலான், தெய்வத்திருமகள், என்று. மறுபுறம் தில், தூள், சாமி என்று ஸ்டைலான படங்கள். இரண்டுமே முற்றிலும் மாறுபட்ட விக்ரமாகத் தான் நமக்குத் தெரியும்.
வினயன் இயக்கத்தில் காசி படம். இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலரையும் வியக்க வைத்தது. இந்தப் படத்துக்காக கண் தெரியாதவராக நடித்து அசத்தியிருப்பார் விக்ரம். கண் தெரியாதவராகவே வாழ்ந்து காட்டியிருப்பார் விக்ரம்.
கண்ணின் கருவிழி முழுவதையும் மேலே ஏற்றி நடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அப்படி ஒரு அசாத்தியமான நடிப்பைத் தான் விக்ரம் கொடுத்து இருந்தார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை இயக்க மலையாளத்தில் விக்ரம் பார்த்துள்ளார்.
'வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' என்ற அந்தப் படத்தில் கலாபவன் மணி நடித்துள்ளார். அவரது வேடத்தைப் பார்த்ததும் வினயனிடம் இதை தமிழில் நான் பண்ணுகிறேன் என்று சொல்ல அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம் வினயன்.
உடனே கண்தெரியாத பர்ஃபார்மன்ஸை அவரிடம் நடித்துக் காட்டியுள்ளார் விக்ரம். உடனே அசந்து போன அவர் தமிழுக்கு ஏற்ப இயக்க முடிவெடுத்தாராம். படத்தில் ஒரு காட்சியில் அழுதபடி சிறிய பறை போன்ற கருவியை வாசிக்க வேண்டும்.
அதற்கு வினயன் 'அதை லாங் ஷாட்டாக விக்ரமின் முகத்தை எடுத்துவிட்டு வாசிப்பதற்கு பரீட்சயமான வாசிப்பாளரின் கைகளை மட்டும் குளோசப் ஷாட்டாக எடுத்து விடுவோம்' என்றார். அதற்கு விக்ரம் சம்மதிக்காமல் 'நாளை எடுக்கலாம்' என்றார்.
'அது ரொம்ப கஷ்டம்' என்றார் வினயன். அதற்கு விக்ரம் விடாப்பிடியாக மறுத்ததும் சம்மதிக்கிறார். அன்று இரவு முழுவதும் வாசிப்பாளர் ஒருவரை வரவழைத்து அதற்காக பயிற்சி எடுத்தாராம் விக்ரம். மறுநாள் அவருடைய விரல்கள் எல்லாமே புண்ணாகிவிட்டதாம். அந்த கைகளோடு அவர் வாசிக்க வினயன் அசந்து விட்டாராம். அதுதான் தமிழில் 'காசி' படமாக வெளியானது.