மீண்டும் தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!.. இது என்னடா புஷ்பா 2-வுக்கு வந்த சோதனை!...
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். துவக்கம் முதலே காதல் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் நடிப்பில் உருவான திரைப்படம்தான் புஷ்பா. தெலுங்கில் முக்கிய இயக்குனராக இருக்கும் சுகுமார் இயக்கிய திரைப்படம் இது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஆந்திராவில் செம்மரக் கட்டையை கடத்தும் கும்பல் தொடர்பான கதை இது. இதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருந்தார் சுகுமார்.
தெலுங்கில் இதற்கு முன் இப்படி ஒரு கதைக்களம் வந்ததில்லை என்பதால் இப்படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதோடு, அதிரடி சண்டை காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் வில்லனாக பகத் பாசில் வருவது போல படம் முடிக்கப்பட்டிருந்தது.
புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. எனவே, அடுத்த பாகத்தை 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். கடந்த 3 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஆனால், அல்லு அர்ஜூனுக்கும் இயக்குனருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. ஒருவழியாக டிசம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாவதாக ஒரு மாதத்திற்கு முன்பே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், இப்போது 2025 ஏப்ரலுக்கு இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, படப்பிடிப்பே இன்னும் சில மாதங்கள் நடக்கும் என சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜூனே இதில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் அல்லு அர்ஜூன் ரசிகர்களும் இதனால் அப்செட் ஆகியுள்ளனர்.