நடிகரா?.. இயக்குனரா?.. தடுமாறிய தனுஷ்.. ராயன் படத்தின் மைனஸ் என்னென்ன?!...

by ராம் சுதன் |

தனுஷின் 50வது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ராயன். பவர் பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற ரசிகர்கள் கொஞ்சம் மழுப்பிதான் சொல்லுகிறார்கள்.

3 ஆண் குழந்தைகள் இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அப்போது வெளியே போகும் அப்பாவும், அம்மாவும் வீடு திரும்பவில்லை. ஒருபக்கம், பெண் குழந்தையை விற்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எனவே, 2 தம்பிகள், ஒரு தங்கையை அழைத்துக்கொண்டு அந்த ஊரிலிருந்து வெளியேறி சென்னை வருகிறார் அண்ணன் ராயன்.

அங்கு இரண்டு ரவுடி கும்பலிடம் மாட்டி கொள்கிறார்கள். ஒருபக்கம், மொத்த ரவுடிகளையும் போட்டு தள்ள நேரம் பார்த்து வருகிறார் காவல் அதிகாரி பிரகாஷ்ராஜ். இதற்கு நடுவில் என்ன நடக்கிறது என்பதுதான் ராயன் படத்தின் கதை. இரண்டு கேங்ஸ்டர் கும்பலின் தலைவன்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சித்தப்பு சரவணன்.

ஆனால், அவர்களின் கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லை. தனுஷுக்கும் அவர்களுக்கும் இடையே என்ன பிரச்சனை என விபரமாக சொல்லப்படவில்லை. அதனாலேயே படத்துடன் ஒன்ற முடியவில்லை. முதல் பாதி மிகவும் மெதுவாக போகிறது. சரி இரண்டாம் பாகத்தில் கதைக்குள் படம் போகும் என எதிர்பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.

கத்தியை கையில் எடுக்கும் தனுஷ் எல்லோரையும் குத்திக் கொண்டே இருக்கிறார். படம் பார்க்கும் நமக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை சுலபமாக யூகிக்க முடிவதே படத்தின் பெரிய பலவீனம். நடிப்பது, இயக்குவது இதில் எதை சரியாக செய்வது என்கிற தடுமாற்றத்தில் தனுஷ் எதிலோ ஒன்றை கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தின் பல காட்சியிலும் லாஜிக் இல்லை. படம் துவங்கி சில நிமிடங்கள் வெற்றிமாறன் படம் போல இருக்கிறது. வன்முறை அதிகம் இருந்தால் ரசிகர்கள் படம் பார்க்க வாருவார்கள் என தனுஷ் நம்பிவிட்டார் போல. கண்டிப்பாக குழந்தைகளுடன் இப்படத்தை பார்க்க முடியாது. கதையையும், கதாபாத்திரங்களையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அமைந்திருந்தால் ராயனை இன்னும் ரசித்திருக்கலாம்.

Next Story