ரஜினின்னா வரமாட்டேன்!.. ஆனா கமல் கூட மோதுவேன்!.. சூர்யா செய்வது சரியா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:12  )

Suriya 44: ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதை விட அந்த படத்தை எப்போது ரிலீஸ் என்பதில் பல சிக்கல்களும் முக்கியத்துவமும் இருக்கிறது. ஒரு திரைப்படம் ரிலீஸாகும் சூழல் மிகவும் முக்கியம். அப்போது வேறு ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகாமல் இருக்க வேண்டும். தொடர் விடுமுறை இருந்தால் நல்லது. அதேநேரம், தொடர் மழை பெய்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள்.

ஒரு நடிகரின் படம் நன்றாக இருந்து ஒரு நடிகரின் படம் சுமார் எனில் கூட்டமெல்லாம் அங்கு போய்விடும். ரஜினிக்கே இது நடந்திருக்கிறது. அவரின் ‘பேட்ட’ படம் வெளியானபோது அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றது.

அதனால் ‘அந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது?’ என யோசித்த ரஜினி விஸ்வாசன்ம் படத்தை பார்த்த சம்பவமும் நடந்தது. அதன் தொடர்ச்சியாகவே அப்பட இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார் ரஜினி. வேட்டையன் படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

ஆனால், சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸ் அக்டோபர 10ம் தேதி என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் சில நாட்கள் கழித்து ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவித்தார்கள். இதனால், கங்குவா படம் பின் வாங்கியது ‘ரஜினி சார் எனக்கு மூத்தவர். அவரை பார்த்து வளர்ந்தவன் நான். எனவே, அவர் படம் வெளியாகும் போது என் படம் வராது’ என அறிக்கை வெளியிட்டார் சூர்யா.

ஆனால், சூர்யாவின் முடிவு தவறானது என பல சினிமா விமர்சகர்களும் சொன்னார்கள். வேட்டையனோடு துணிந்து சூர்யா மோதியிருக்க வேண்டும் என சொன்னார்கள். இப்போது, கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டனர். ஒருபக்கம், கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போனார் சூர்யா. இது சூர்யாவின் 44வது திரைப்படமாகும். இந்த படத்தை வேகமாக முடித்துவிட்டனர்.

இந்நிலையில், இந்த படம் 2025 கோடை காலத்தில் வெளியாகும் என சொல்லி இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைப்’ படமும் அப்போதுதான் வெளியாகவிருக்கிறது. எனவே, ரஜினி கூட மோத மாட்டேன் என சொன்ன சூர்யா கமலுடன் மட்டும் மோதுவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனாலும், இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகாது என நம்பலாம்!...

Next Story