மெய்யழகன் நல்ல படம்தான்!. ஆனால் காசு வந்துச்சா?!.. சூர்யா பதில் இதுதான்!...
பெரும்பாலான நடிகர்கள் தங்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாதுகாப்பாக கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிப்பார்கள். அதாவது காதல், செண்டிமெண்ட், அழகான கதாநாயகி, அவருடன் 4 டூயட். வில்லன், ஆக்சன், காமெடி என எல்லாம் தனது படத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஏனெனில், வெற்றி பெறுவதற்கு இதுதான் சுலபமான வழி என்பதில் தெளிவாக இருப்பார்கள். சில நடிகர்கள் நல்ல கதையம்சம் கொண்ட, பேசப்படும் கதைகளில் நடிப்பார்கள். சில நடிகர்கள் கமர்ஷியல் சினிமா ஒருபக்கம், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என பயணம் செய்வார்கள். தனுஷ், விக்ரம் எல்லாம் அப்படித்தான்.
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படங்கள் மிகவும் குறைவு. ஃபீல் குட் படங்கள் கொடுக்கும் உணர்வை ஆக்சன் படங்களால் கொடுத்துவிட முடியாது. இயக்குனர் விக்ரமன் சில ஃபீல் குட் படங்களை இயக்கியிருக்கிறார். பெரும்பாலான இயக்குனர்கள் ஆக்சன் மற்றும் காதல் கதைகள் பக்கமே போனார்கள்.
அவ்வப்போது ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் வந்தது. அந்த வரிசையில் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 96 எனும் ஃபீல் குட் படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. அதன்பின் அதே இயக்குனர் பிரேம் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் என்கிற படத்தை இயக்கினார்.
நகரத்தில் வசிக்கும் ஒருவர் தனது பூர்விக கிராமத்திற்கு செல்லும்போது அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. தஞ்சாவூர் கிராமங்களையும், அந்த மக்கள் பழகும் விதத்தையும் இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தனர். இந்த படம் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. இந்த படத்தை பார்த்த பலரும் மெய்யழகன் தங்களின் பூர்வீக வாழ்க்கையை காட்டுவதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
செப்டம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியான இந்த படம் அக்டோபர் 25ம் தேதி ஓடிடியில் வெளியானது. தியேட்டரில் பார்க்காத பலரும் ஓடிடியில் இப்படத்தை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் வசூல் பற்றி பேசியுள்ள சூர்யா ‘மெய்யழகன் படத்தை தயாரித்ததில் எனக்கு பெருமை.
10 சதவீத லாபத்தை மட்டுமே நான் எதிர்பார்த்தேன். ஆனால், 25 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது. ஒரு படம் வெற்றியா என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். அதையும் தாண்டி படத்தின் உள்ளடக்கம்தான் முக்கியம். வசூல் அல்ல. மெய்யழகன் போல மனித உணர்வுகளை அழகாக பதிவு செய்த படங்களை நான் சமீபத்தில் பார்க்கவில்லை’ என சொல்லி இருக்கிறார்.