உடைந்த சேர்கள்.. ஒரே குப்பை!.. விஜய் படம் FDFS பார்க்க வந்த மாதிரி ஆக்கிட்டாங்களே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:49  )

Tvk maanadu: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது. அதேபோல், கட்சி கொடியையும் விஜய் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதியான நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

கடந்த சில நாட்களாகவே இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த மாநாடுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான முகப்பு தோற்றமும் மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கார், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் மற்றும் விஜய் ஆகியோரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

விஜயை அருகில் பார்க்கவும், விஜயின் அரசியல் பேச்சை கேட்கவும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் விஜய் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் குவிந்தனர். மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் விஜய் ரசிகர்கள் வந்திருந்தனர். வேன், கார், ஜீப், பைக், பேருந்து ஆகியவற்றில் விஜய் ரசிகர்கள் மாநாட்டை நோக்கி படையெடுத்தார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் அங்கே குவிய துவங்கிவிட்டனர். மதியம் 2 மணிக்கே அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பியது. ஒருபக்கம், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி மாநாட்டை சீக்கிரம் நடத்தி முடிக்குமாறு காவல் அதிகாரிகள் சொல்ல விஜய் 4 மணிக்கு மேல் பேச துவங்கினார்.

சுமார் 45 நிமிடம் அவர் ரசிகர்கள் முன்பு உரையாற்றினார். ஆக்ரோஷமாக பல விஷயங்களை அவர் பேசினார். பிளவுப்படுத்தும் அரசியல் தனது கொள்கை எதிரி எனவும், திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்கள் தனது அரசியல் எதிரிகள் எனவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சி முடிந்து அவர் கிளம்பி சென்றதும் அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்களும் தங்களின் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஒரே நேரத்தில் எல்லோரும் புறப்பட்டதால் சில மணி நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அங்கு போடப்பட்டிருந்த பல சேர்கள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், தண்ணீர் பாட்டில்கள் கீழே போடப்பட்டிருந்தது.

இதை வீடியோவாக எடுத்து ‘விஜய் ரசிகர்கள் விஜய் படங்களின் முதல் நாள் காட்சி பார்க்கும்போது தியேட்டரில் சேரை உடைப்பது போல இங்கேயும் செய்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாத விஜய்தான் நாட்டை ஆள ஆசைப்படுகிறாரா?’ என சிலர் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story