தண்ணியும் இல்ல.. பந்தலும் இல்ல!. வெயிலில் காயும் விஜய் ரசிகர்கள்!.. இதெல்லாம் தேவையா?!..
Tvk Maanadu: விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் 20 நாட்களுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்தது. பிரம்மாண்டமான முகப்பு தோற்றம் மற்றும் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில்,5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்க்கிறது. வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மாலையில் கொடுக்க தண்ணீர் மற்றும் ஸ்னேக்ஸ் ஆகியவை தயாராக இருக்கிறது. விஜய் மற்றும் விஐபிக்கள் மாநாட்டுக்கு செல்ல தனி பாதைகளும் போடப்பட்டிருக்கிறது. முகப்பில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், விஜய் உள்ளிட்ட பலரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் நேற்று இரவே மாநாடு நடக்கும் இடத்திற்கு போய்விட்டார். அதோடு, பணிகள் எப்படி நடந்திருக்கிறது மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், ரசிகர்களுக்கான வசதிகள் என எல்லாவற்றையும் அவர் ஆய்வு செய்தார். இரவு அவர் அங்கேயே தங்க கேரவான் மற்றும் அறையும் தயார் நிலையில் இருந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலைதான் நடக்கவிருக்கி|றது. ஆனால், நேற்று இரவு முதலே விஜய் ரசிகர்கள் பலர் அங்கு சென்றுவிட்டனர். அவர்கள் எல்லோரும் மாநாடு நடக்கும் பகுதியிலேயே படுத்து உறங்கினார்கள். ரசிகர்களுக்கு மொபைல் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், காலை உணவு அளிக்கப்படவில்லை. எனவே, பலரும் ஹோட்டல்களை தேடி அலைந்தனர். சிலரோ ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திரும்பிய பின்னரும் ஹோட்டல்கள் இல்லை என புலம்பினார்கள். ஒருபக்கம், மாநாடு மைதானத்தில் பந்தல் அமைக்கப்படவில்லை. எனவே, ரசிகர்கள் வெயிலில் அமர்ந்துள்ளனர்.
வெயில் தாங்கமுடியாமல் சேர்களை தூக்கி தலைக்கு மேல் வைத்து பலரும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தரப்படவில்லை என சொல்லப்படுகிறது.