Categories: Cinema News latest news

அன்னைக்கு சொன்னது வேற!. இப்ப வேற மாதிரி பேசும் அஜித்!.. எல்லாம் மாறிடுச்சே!…

Ajithkumar Racing: நடிகர் அஜித் எப்போதும் தனக்கென ஒரு கொள்கையோடு வாழ்பவர். தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றுபவர். அதேநேரம், தன்னுடைய இந்த சுபாவத்தால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருப்பார். சினிமாவில் கஷ்டப்பட்டுதான் மேலே வந்தார்.

ஏனெனில், விஜயை போல அஜித்தின் அப்பா சினிமா இயக்குனர் இல்லை. மாடலிங் துறைக்கு போய் சில விளம்பர படங்களில் நடித்து, பின்னர் தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்கிற படத்தில் அறிமுகமாகி அதன்பின் தமிழில் அமராவதி என்கிற படத்தில் அறிமுகமானார். சாக்லேட் பாய் தோற்றம் என்றாலும் போகப்போக தன்னை ஒரு ஆக்சன் மற்றும் மாஸ் ஹீரோவாக மாற்றிகொண்டார்.

கடந்த பல வருடங்களாகவே அஜித் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்வது இல்லை. கடைசியாக 2010ம் வருடம் சரண் இயக்கத்தில் உருவான அசல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பின் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. எந்த ஊடகத்திற்கும் அவர் பேட்டி கொடுக்கவில்லை.

ஒரு நடிகர் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. இதை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால், அஜித் தனது ஒப்பந்தத்தில் இதை ஏற்றுக்கொள்வது இல்லை. அதை அஜித் செய்யாமல் இருப்பது தவறு என தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றவர்கள் சொல்லி வந்தாலும் அஜித் அதையெல்லாம் கேட்பதில்லை. என்னை ரசிகர்கள் சினிமாவில் பார்த்தால் போதும் என்றே அவர் நினைக்கிறார்.

இந்நிலையில்தான், துபாயில் நடக்கும் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாகவே துபாயில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில்தான் அஜித் இருக்கிறார். அதோடு, ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோவையும் வெளியிட்டு சர்ப்பரைஸ் கொடுத்தார். ஒருபக்கம், சில ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.

அப்போது ‘நீங்கள் கார் ரேஸில் கலந்துகொள்வதை உங்கள் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்களா?’ என ஒருவர் கேட்டதற்கு ‘ நான் என்ன செய்ய வேண்டும். செய்யக்கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடவேண்டும் என அவசியம் இல்லை’ என அஜித் சொன்னார். ஆனால், இதே அஜித் சினிமாவில் வளரும்போது கொடுத்த பேட்டியில் ‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பைக் ரேஸ் எனக்கு ஒரு ஹாபியா இருந்தது. ஆனால், இப்போது நான் பைக் ரேஸில் கலந்துகொண்டால் என் தயாரிப்பாளர்கள் என்னை சாவடித்துவிடுவார்கள்’ என பேசியிருந்தார். இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து ‘அப்போது இருந்த அஜித் வேறு. இப்போது அவர் மாறிவிட்டார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

ஒருபக்கம் துபாய் கார் ரேஸில் வெற்றியை பெற்று நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்திருக்கிறார் அஜித். கடந்த 20 வருடங்களில் இந்தியாவை சேர்ந்த யாரும் கார் ரேஸில் வெற்றி பெற்றது இல்லை என சொல்கிறார்கள். எனவே, அஜித்தை இயக்குனர் அமீர், சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published by
சிவா